பக்கம்:கனிச்சாறு 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  103


62  ஓ! ஓ! ஓ! பார்ப்பனரே !

ஊழி பெருகி உலகம் புரண்டாலும்
உளந்திருந்த மாட்டீர்கள், ஓ!ஓ!ஓ! பார்ப்பனரே!
வாழி நும் உள்ளம்!வாழி இனவுணர்வு!
வாயார வாழ்த்துகின்றேன்; ஆனாலும் ஒன்றுரைப்பேன்!
“ஆழி உலகமெலாம் ஆண்டிருந்த செந்தமிழர்
ஆற்றல் குறைந்தார்; அணுவாய்ச் சிதைந்துவிட்டார்;
பூழி மணலில் புதையுண்டார்” - என்றே, நீர்
பொய்க்கனவு கண்டிருந்தீர்; பொங்கிவிட்டார்; திந்திமிதீம்!

ஒன்றன்று; மூவா யிரமாண்டாய் எம்வரலாற்
றுண்மை மறைத்திருந்தீர், ஓ!ஓ!ஓ! பார்ப்பனரே!
கொன்றன்றே, ஆழக் குழிவெட்டி மூடிவிட்டீர்;
குலங்கோடி செய்தீர்; மதப்புரட்டு கோடிசெய்தீர்!
'நன்றன்று நன்றி மறப்ப'தென்று கற்றிருப்பீர்.
நடந்த திருட்காலம்; நண்ணிற்று பேரொளியும்!
இன்றன்று; நாளையன்று; என்றேனும் எந்தமிழர்
இழந்தபுகழ் மீண்டுமிங்கே ஏற்றுவர்காண்! திந்திமிதீம்!

ஊற்றுப் பெருக்காய் உணர்வெடுத்துப் பாய்ந்ததுகாண்!
உளந்திருந்திக் கொள்ளுங்கள், ஓ!ஓ!ஓ! பார்ப்பனரே!
கூற்றுக் கொதிப்புப்போல் கொப்பறையின் நெய்க்கொதிபோல்
கொம்பூதிச் சங்கூதிக் கொண்டு கிளம்பிவிட்டார்!
ஆற்றல் பெரிதுகாண்; எள்ளற்க ஆரியமே!
அனைத்துலகும் இணைந்தெழுமுன் அகந்தை அகற்றுவிரே!
மாற்றம் பெறுங்கள் ;இலை மாற்றப் படுவீர்கள்!
மாந்தரொடு மாந்தரென வாழ்ந்திருங்கள்; திந்திமிதீம்!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/139&oldid=1424760" இலிருந்து மீள்விக்கப்பட்டது