பக்கம்:கனிச்சாறு 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  107


66  கருத்தை மாற்றுவீர் புலவர்களே!

காலம் மாறியது, காட்சி மாறியது;
கருத்தை மாற்றுவீர் புலவர்களே! - தமிழ்ப்
புலவர்களே! - புதுக்
கோலம் புனைந்ததிவ் வுலகம்! ஆகவே
கொள்கை புதுக்குவீர் புலவர்களே!

இராமா யணத்தையும் வில்லிபா ரதத்தையும்
எத்தனை யாண்டுகள் எடுத்தரைப்பீர்? - நலம்
தடுத்துரைப்பீர்? - உயர்(வு)
இராமல் நசிந்திடும் தமிழின மக்களுக்
கென்று முன் னேற்றத்தைத் தொடுத்துரைப்பீர்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாகவே
ஆரியம் - தமிழ் - எனக் கலந்துரைத்தீர் - மொழி
நலங்குறைத்தீர் - இன்று
பாயிரம் பாடினோம் தனித்தமிழ்க் கே!நல்ல
பாவியம் பாடியே வளங்குவிப்பீர்!

புதுப்புது இலக்கியம் செய்தளி பீர்;பழம்
பூழ்க்கை இலக்கியம் கைவிடுவீர் - இனி
மெய்நடுவீர்! - ஒரு
பொதுப்படை யானநல் லுலகம் மலர்ந்தது;
பொதுமை இலக்கியம் செய்திடுவீர்!

அரசர் கதைகளும் அழகியர் கதைகளும்
அறிவையும் உயர்வையும் வீழ்த்தினவாம்! - நமைத்
தாழ்த்தினவாம்! - புது
முரசறை விப்பீர் தமிழ்ப்புல வீர்! இனி
முகிழ்த்திடும் அறிவியல் வாழ்த்திடவே!

குலமும் சமயமும் கொண்டு பிளந்திடும்
குமுகா யத்தினை மாற்றிடுவோம்! - பொது
'நாற்றிடுவோம்! - உயிர்
நலமும் வாழ்க்கையும் மாந்தரெல் லார்க்கும்
நடுவெனும் நயன்முறை சாற்றிடுவோம்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/143&oldid=1424764" இலிருந்து மீள்விக்கப்பட்டது