பக்கம்:கனிச்சாறு 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

தன்னுணர்வைக் கட்டவிழ்த்தான்! தன்மானம் விட்டான்! -
தாழ்ச்சியிலாப் பெருமொழியை வீழ்ச்சியுற வைத்தான்;
முன்னுணர்வைத் தானிழந்தான்; மொய்ம்புகழைக் கொன்றான்;
முக்கழகச் சீர் மறந்தான்; பேர்மறந்தான்; இக்கால்
தின்னுமொரு கைச்சோற்றைப் பெரிதென்றே எண்ணித்
தீய்க்கின்றான் தமிழ்நலத்தை; சாய்க்கின்றான் குடியை!
இன்னுமெவ்வா றெடுத்துரைப்பேன்? அம்மாவோ! அடடா!
எடுத்தெறியும் எச்சிலைக்கே இனங்காட்டித் தந்தான்! 5

இப்படியாய்க் கீழ்ப்படியில் இருந்தபடி வாழும்
இந்நாட்டுத் தமிழினத்தை விட்டயல்நா டேகி
அப்படியே பழந்தமிழ்வாழ் தமிழர்களாய் வாழ்வீர்!
அடிவயிறுங் குளிர்ந்ததுகாண் உமையெண்ண எண்ண!
முப்படியாய் உயர்ந்து விட்டீர் உடன்பிறப்பீர்! நாங்கள்
முதுகாட்டின் பழம்பிணமாய் அழுகுகின்ற போழ்தில்
கொப்படியில் முளைவிட்டுத் துளிர்க்கின்ற செடிபோல்
கொழுந்துவிட்டே இலைவிட்டுப் பூவிட்டுக் காய்த்தீர்! 6

காய்த்தகுலை கிளைகனக்கக் கனிந்துவர லானீர்;
கண்குளிரக் காண்கின்றேன்; உம் வளர்ச்சி கோடி!
சாய்த்ததலை நிமிரவில்லை தமிழ்நாட்டில் தமிழன்.
சாகடித்தே இழுத்தெறியக் குறிபார்ப்பார் பகைவர்;
ஏய்த்தநிலை மாறி,அவர்க் கேறுநிலை இன்றே!
எந்தமிழர் தம்கணக்கோ என்னவென்று பார்த்தால்,
வாய்த்தகுலை கோடி; அதில் அழுகல் அரைக் கோடி!
வாகாகப் பழுப்பதெல்லாம் பத்திலக்கத் தொன்றே! 7

தமிழ்நாட்டைத் தமிழமைச்சன் தான் ஆளு கின்றான்;
தமிழமைச்சர் தாம்,அரசை வழிநடத்திப் போவார்!
தமிழ்நாட்டின் பெயர்மாற்றம் செய்ததுதான் மிச்சம்!
தமிழ்மொழியின் வளர்ச்சியிலோ அப்படியப் படியே!
தமிழ்நாட்டுத் தாளிகைகள் தமிழ் மொழியைக் கொல்லும்!
தமிழ் எழுத்தில் அச்சுவரும்; நரகல்நடைப் பேச்சு!
தமிழ்நாட்டில் தமிழரில்லை; இருந்(து) அவர்வாய் திறந்தால்
தமிழ்மணப்ப தில்லை;ஐயோ! பிறமொழித்தீ நாற்றம்! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/146&oldid=1424768" இலிருந்து மீள்விக்கப்பட்டது