பக்கம்:கனிச்சாறு 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  119


73  தமிழ இனமே! தமிழ இனமே!

தமிழ இனமே! தமிழ இனமே!
கமழக் கமழக் கழகக் காலத்து
ஓங்கிய வாழ்க்கை தாங்கி யிருந்து,
நீங்குதல் அறியா அடிமை நிலைபெறத்
தாழ்ந்து கிடக்கும் தமிழ இனமே!
வாழ்ந்து கிடந்த வரலாற்றைப் புதுக்குவாய்!

உனைவிழிப் பிக்கவும் உனைவாழ் விக்கவும்
உனையிவ் வுலகத்துள் உரிமை இனமெனப்
பட்டயங் கட்டிப் பழம்புகழ் மீட்கவும்
கொட்டிய முரசம் எத்தனை தெரியுமா? 10
கூக்குர லிட்டவர் எவர் எவர் அறிவையா?
ஏக்கமுற் றுன்னை எழுக எழுகென
எழுதிக் குவித்த கைகள் எத்தனை?
தொழுது வேண்டிய வாய்கள் எத்தனை?

தோளை உலுக்கித் தூக்கி நிறுத்தி
‘வாளைச் சுழற்றடா' என்றுனை வாழ்த்திய
பாட்டின் வேந்தன் பாரதி தாசற்கு
நீட்டி முழக்கி விழாநிகழ்த் தினையே!
என்ன பொருளில் இவ்விழா வெடுத்தாய்?
சொன்னவன் பாட்டின் சொற் பொருள் என்ன? 20
என்ன சொன்னான்? எவர்க்கவன் சொன்னான்?
இன்ன விளக்கங்கள் எல்லாம் அறிவையா?

குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும்
முட்டாள் தமிழனே! மூடப் பிறவியே!
ஒன்றுகேள்; நீயோர் ஊமைய னல்லன்;
தொன்றுதொட் டடிமைத் தொழும்பனு மல்லன்!
அன்றுன் தமிழ்க்கொடி பனிமலை ஆண்டது.
இன்றுன் தமிழ்த்தலை இந்திக்குத் தாழ்ந்தது.
வடவரின் தொடர்பால் மானமும் வறண்டது!
தொடவும் கூசித் தோளைச் சிலிர்த்தவன் 30
திட்டத் திட்டப் பல்லொளி தெறிக்க,
தொட்டுத் தொட்டுச் சிரித்துப் பழகுவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/155&oldid=1424777" இலிருந்து மீள்விக்கப்பட்டது