பக்கம்:கனிச்சாறு 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

77  தமிழ்த் தொண்டர் அறிந்திடுக!


எந்தமிழர் மொழிநலத்தைக் காக்கின்றார்
எவரவரே எமக்கிங் காசான்;
எந்தமிழர் இனநலத்தைப் பேணுகின்றார்
எவரவரே எமக்குத் தோழர்;
எந்தமிழர் உரிமைபெற உழைக்கின்றார்
எவரவரெந் தலைவர்; என்றும்
எந்தமிழர் பழம்பெருமை மீட்கின்றார்
எவரவர்க்கே தொண்டர் யாமே!

தமிழர் ஒரு தவறு செய்தால், தமைப்பெரிதாய்
எண்ணியதைத் தமுக்க டிப்போர்
நமிலிருப்பர்; நாமவரை இனங்கண்டு
நகல்வேண்டும்! நன்மை எண்ணி
உமிமலையில் ஓரரிசி கண்டாலும்
அதைப்பொறுக்கி உயர்வு செய்யும்
அமிழ்தமனங் கொண்டவரே இனங்காப்பார்;
அவரையும்நாம் அறிதல் வேண்டும்!

தக்காரும் தகவிலரும் தம்செயலால்
தமில்தாமே உயர்வர்; தாழ்வர்!
பொக்காரும் சிற்சிலகால் மணியார்போல்
பொலிவிப்பர்; உணர்தல் வேண்டும்!
முக்காலும் முழுப்பொய்யை வாய்ச்சரக்கால்
மூடுவதும் முடியா தன்றோ?
எக்காலுங் குறையாத கொள்கை, வினை
எவர்க்குண்டோ அவரே எம்மோர்!

நந்தமிழர் நலம்பேணும் நாட்டமவர்க்
குண்டாயின் நாத்த டிந்து
செந்தமிழின் நலங்காப்பார் தமையொருவர்
சிறுமைசெய எண்ணு வாரோ?
வெந்தழியும் உள்ளத்தால் பிறருயர்வை
வியக்காமல் வெயர்ப்பார் தம்மை
எந்தமொழி யாலுயர்த்த - எந்தமொழி
யால்திருத்த - எண்ணு வோமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/166&oldid=1416758" இலிருந்து மீள்விக்கப்பட்டது