பக்கம்:கனிச்சாறு 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

தீட்டுகின்ற மரத்தினிலே கத்தியின்கூர்
தேர்ந்திடுஞ்செய் நன்றி யின்மை
கூட்டுணர்வைக் குலைத்துவிடும்; இரண்டகத்தைக்
குருத்தவிழ்க்கும்; கூம்பச் செய்யும்!
காட்டுகின்ற நன்றியள வாமுயர்வு;
நன்றியற்றார் உய்தல் இல்லை.
பூட்டுகின்ற வாயினராய் அவரவர்தம்
புலமையினைப் பொலியச் செய்க!

எக்காலும் எல்லாரும் ஒன்றிணைதல்
எனுங்கொள்கை இயற்கை யில்லை;
திக்காலுக் கொன்றிரண்டாய்த் திரிபவரை
இணைக்குங்கால் தெரியும் உண்மை!
சுக்காலும் மிளகாலும் காரங்கள்
தனித்தனியாம்; சுள்ளி வேறாம்!
முக்காலோ அரைக்காலோ முடிந்தமட்டும்
இணைந்தவரை முனையச் செய்க!

நமக்கொருகால் வாய்ப்புளதென் றொருமுதுகில்
நாட்டியவாள் நம்மோர் வாங்கித்
தமக்கெருவாய் நம்முதுகில் தைக்கின்ற
நாள்வரவும் தயங்கி டாது!
கமுக்கமொடு செயுந்தீங்கும் வெளிப்படுதல்
காலத்தால் கனியுஞ் செய்கை!
நமக்குள் நாம் புறம்பேசித் தாழ்ந்திழியின்
இனப்பகைதான் நலிவ தெங்கே?

குன்றியள வெண்ணியதும் குன்றளவாய்ச்
செய்தவர்போல் கூறு வாரும்,
நன்றியறி வின்றித்தாம் ஏறிவந்த
அடிமரத்தை நறுக்கு வாரும்,
மன்றினிலே நிமர்ந்துரைக்கத் திறனின்றி
மறைவினிலே மழுப்பு வாரும்,
இன்றினியும் தமிழினத்தில் இருக்குமட்டும்
எந்தமிழர்க் கேற்றம் இல்லை.

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/168&oldid=1416761" இலிருந்து மீள்விக்கப்பட்டது