பக்கம்:கனிச்சாறு 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

தூக்கிய கழுத்துப் பட்டை!
துவளாத சட்டை! காலைப்
போக்கிய இறுகல் காற்பை!
இடுப்பெனும் துடைப்பக் குச்சி!
(தாக்கிய சொற்கள் அல்ல;
தாங்கொணத் துயரத் தாலே -
ஊக்கிடும் நோக்கத் தோடே -
உலராத கண்ணீர்ச் சொற்கள்!)

அடடா! எம் இளைஞர்க் கந்நாள்
ஆற்றலும் துணிவும் மீண்டால்.....!
இடமென்ன, காலமென்ன,
எந்தமிழ் இனத்தை மீட்க?
தடமார்பு! குன்றத் தோள்கள்!
தழல்விழி! அரிமாச் சீற்றம்
முடமாகும் ஆரி யங்கள்!
முண்டமாய்ச் சரிந்து போகும்!

நேற்றில்லை; என்றோ சாய்ந்த
வரலாறு நிமிர்ந்து நிற்கும்!
கூற்றில்லை; மந்திரச் சொல்!
குலைவுற்ற தமிழர் நெஞ்சில்
காற்றில்லை; கனப்பு மில்லை!
ஆதலால் காய்ப்பு மில்லை!
ஏற்றதோர் பொழுது நேரும்;
இந்தியா மூளி யாகும்!

அழுலுண்டு தமிழர் நெஞ்சில்
அஃதோர்நாள் கனத்த லுண்டு!
எழலுண்டு, தமிழர் கூட்டம்!
இருபது நூற்றாண் டாக -
நிழலுண்டு; பழம்பால் உண்டு;
நெய்யுண்ட ‘மிலேச்சர்' கூட்டம்
விழலுண்டு! தமிழர்க் கந்தாள்
விடிவுண்டு; விளைவும் உண்டே!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/170&oldid=1416763" இலிருந்து மீள்விக்கப்பட்டது