பக்கம்:கனிச்சாறு 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  143


86 
வாழ்வே இலை வீழ்வே என
வருவாய் தமிழ் மகனே!

தமிழ்த்தாய் பெறுந் துயரைவிடத்
தாயின் துயர் பெரிதோ - நம்
தாயின் துயர் பெரிதோ - நிலை
பெரிதோ - அவள்
அமிழ்தாம் தமிழ் மொழியைவிட
அன்னை உரை இனிதோ - நம்
அன்னை உரை இனிதோ - பொருள்
இனிதோ? (தமிழ்த்)

உயர்வாம் தமிழ் இனத்தைவிட
உற்றார் தொகை பெரிதோ - நம்
உற்றார் தொகை பெரிதோ - நலம்
பெரிதோ? - அவர்
பெயர் மேவிய நாட்டைவிடப்
பெற்றோர் நலம் பெரிதோ - நம்
பெற்றோர் நலம் பெரிதோ - மிகப்
பெரிதோ? (தமிழ்த்)

மலையாத் தமிழ்ப் போரைவிட
மனையாள் உற வினிதோ - நம்
மனையாள் உற வினிதோ - இதழ்
இனிதோ - அதன்
குலையாப் பெரும் புகழைவிடக்
குழந்தை நலம் பெரிதோ - நம்
குழந்தை நலம் பெரிதோ - நகை
பெரிதோ? (தமிழ்த்)

துயர் தூவிய அடிமைத்தனம்
தொலையாப் பெரும் பகைமை - என்றுந்
தொலையாப் பெரும் பகைமை - நெடும்
பகைமை - தமை
அயர்வே தவிர்த் தழிக்கா விடில்
அடடா, தொலைந் தனையே - அட
அடடா, தொலைந் தனையே - அழிந்
தனையே! (தமிழ்த்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/179&oldid=1424792" இலிருந்து மீள்விக்கப்பட்டது