பக்கம்:கனிச்சாறு 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  145

“உழைப்பே இருக்கும்;
உறக்கம் இராது!
மழைக்கும் வெயிற்கும்
மனந்தயங் காமல்
அழைக்கும் பணிக்குள்
அமிழ்ந்திடல் வேண்டும்!
பிழைப்பெலாம் செந்தமிழ்ப்
பிழைப்புதான்!” - என்றே,
“என் தமிழ் நாட்டிற்கும் இனத்திற்கும் மொழிக்கும்
என்னுயிர் உடல்பொருள் ஈவேன்” என்று, என்
முன்வந்த ஒருவர்க்கு முழுதும் விளக்கினேன்!
மின்வந்த கண்ணினால் மேல்கீழ் நோக்கியே,
பின்வந்து பார்ப்பதாய்ப் பேசிச்சென் றாரே!

“இகழ்ச்சிகள் இருக்கும்;
ஏச்சுகள் வருத்தும்"
புகழ்ச்சி வாய் உரைதான்!
புல்லியர் இடர்க்கு
நெகிழ்ச்சி, கூடாது!
நிலைத்திடல் அரிது!
மகிழ்ச்சி என்பதே
தமிழின் மலர்ச்சிதான்!”
- என்று வருகிறீர்?” என்றே என் தமிழ்த்
தொண்டுக்குத் துணையாய்த் துணிந்துவந் தவர்க்கு
நன்று விளக்கினேன்; “நல்லதென் மனைவிபாற்
சென்று கலந்து வருவேன்” - எனச் சென்றவர்
இன்று வரையிலும் எதிர்வர வில்லையே!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/181&oldid=1416780" இலிருந்து மீள்விக்கப்பட்டது