பக்கம்:கனிச்சாறு 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  147


மொழியினை இழந்துவிட்டான்; - பல
மூடப்ப ழக்கங்கள் கொண்டுவிட்டான்; - வந்த
வழியினைத் துறந்துவிட்டான் - தான்
வாழ்ந்திட அடிமையாய்த் துணிந்துவிட்டான் - எனும்
பழியினை நினைத்து விட்டேன் - இப்
பாழ்மனம் எனைநொடி விடுவதில்லை - இந்த
இழிவினைத் துடைப்பதற்கே - எனை
இராப்பகல் தூண்டியே அலைக்கழிக்கும்! - வேறு
எனக்கென எதுவுமில்லை! - இந்த
இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர!

-1975


89  இருப்பினும் ஒரு கை பார்த்திடலாம்!

எனக்குத் தெரியும், 'இந்தத் தமிழன்
என்றைக்கும் உருப்பட மாட்டான்' என்பது!
தனக்கும் உதவான்; தமிழ்க்கும் உதவான்!
தன்னின் நன்மைக்கும் நாட்டுக்கும் உதவான்!
திருப்பம் இலாமல் சென்ற திசையிலே
தேடியும் ஓடியும் தேம்பியுந் திரிவான்!
இருப்பினும் ஒருகை பார்த்திடலாம்; - மன
எழுச்சியை அவன்பால் சேர்த்திடலாம்!

எனக்குத் தெரியும், 'இந்தத் தமிழன்
என்றைக்கும் திருந்திட மாட்டான்' என்பது!
மினுக்கத் தெரிந்துளான் மெலுக்காய்த் திரிவான்!
மெப்புக்கே உழைப்பான்; உப்புக்கும் அலைவான்;
காயினும் காய்வான்; நனையினும் நனைவான்!
கடுமையாய் உதைப்பார்க்கு அடிமையாய்க் கிடப்பான்
ஆயினும் ஒருகை பார்த்திடலாம்; - அவன்
அடிமைக் குழியைத் தூர்த்திடலாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/183&oldid=1416783" இலிருந்து மீள்விக்கப்பட்டது