பக்கம்:கனிச்சாறு 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

எனக்குத் தெரியும், ‘இந்தத் தமிழன்
என்றைக்கும் உரிமையை மீட்கான்' என்பது!
மனக்குழப் பத்தினால் மாளினும் மாள்வான்!
மற்றவர் முயற்சியை நம்பவும் மாட்டான்!
தன்னினம் பேணான்; தாய்மொழி பேசான்;
தன்னையே விற்றுத் தன்குடல் வளர்ப்பான்!
என்னினும் ஒருகை பார்த்திடலாம்! - அவன்
ஏற்றத்தில் நறுநீர் வார்த்திடலாம்!

எனக்குத் தெரியும், ‘இந்தத் தமிழன்
இம்மியும் உணர்ந்திட மாட்டான்' என்பது!
இனக்கொலை புரிவதில் இவன்பெரும் எத்தன்!
இருப்புக் கோடரிக் காம்புக்குக் கொம்பன்!
நின்றாலும் நிற்பான்; நெடுங்கிடை வீழ்ந்தால்
நெருப்புப் பிடித்தாலும் நெகிழாத வம்பன்!
என்றாலும் ஒருகை பார்த்திடலாம்! - அவன்
இழிவினில் ஒருதுளி தீர்த்திடலாம்!

-1975


90  தனியேனாய் நின்றாலும்
என் கொள்கை மாறேன்!

தமிழர்களே எனைத் தாழ்த்தி வீழ்த்திடினும் அந்தத்
தமிழர்களுக் குழைப்பதுமே எனதுபெருங் கொள்கை!
தமிழரினால் செத்தாலும் தமிழ்க்குச்செத் தாலும்
தகுபொருளும் ஒன்றேதான் தாழ்ச்சியதில் இல்லை!
அமிழாத உணர்வாலே மொழி, இனத்தைக் காப்போன்
அயலாரால் வீழ்வதுவும் தாழ்வதுவும் நன்றோ?
உமிழாத தமிழர்களும் உமிழட்டும் காறி;

“உனக்கேனோ எமைக்காக்கும் வீண்வேலை” - என்றே!
1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/184&oldid=1424787" இலிருந்து மீள்விக்கப்பட்டது