பக்கம்:கனிச்சாறு 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  149

நோய்முற்றிக் கிடக்கின்ற நோயாளி போல,
நொடிகின்ற என்னினத்தைக் காத்திடற்குப் போவேன்,
வாய்முற்றிப் பேசிடினும் அடித்தாலும் அதனை
வருந்தட்டும் எனவிட்டுப் புறம்போகு வேனோ?
தாய்நெற்றிச் சாகின்ற குஞ்சுகளும் உண்டோ?
தனிக்குஞ்சே ஆனாலும் தமிழ்க்குஞ்சாம் அன்றோ?
காய்முற்றிப் பழமாகும் காலமிது காலம்!
கயவர்க்கும் புல்லர்க்கும் கவலாதென் நெஞ்சே! 2

பேச்சுக்கும் ஏச்சுக்கும் பொருளில்லை, என்பால்!
பிறழ்கின்ற போக்குக்கும் மதிப்பில்லை, என்பால்!
பூச்சுக்கும் புனைவுக்கும் மயங்கிவிடேன் என்றும்!
புகழுக்கும் இகழுக்கும் பொருளொன்றே கொண்டேன்!
நீச்சுக்கும் நட்புக்கும் இடத்தாலே பெருமை!
நிழலுக்கும் வெயிலுக்கும் காலத்தால் பெருமை!
மூச்சுக்கும் வாழ்வுக்கும் தமிழென்று கொண்டேன்,
முகத்துக்கும் வயிற்றுக்கும் பிறரைப்பார்ப் பேனோ? 3

எதைப்பற்றி வாழ்ந்தாலும் தமிழருமிந் நாளில்
எந்தமிழைப் பற்றிக்கொண் டிருந்தால்தான் தம்மில்
சிதைப்பற்று வாழ்ந்திடலாம்; உய்ந்திடலாம்! அல்லால்
சிறுமைக்கும் அழிவுக்கும் உடன்படுதல் வேண்டும்!
கதைப்பதுவும் நடிப்பதுவும் காதுக்கும் விழிக்கும்
களிப்பூட்டும்; ஆனாலும் அடிமைநீக் காவாம்!
பதைப்புற்றுத் துடிப்புற்றுத் தமிழரெலாம் இன்றே
பழிநீக்கும் உரிமைக்குப் பாடுபடல் நன்றே! 4

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்ப்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிரு கூறாய்ப்
போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெலாம் அதுவே! 5

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/185&oldid=1424788" இலிருந்து மீள்விக்கப்பட்டது