பக்கம்:கனிச்சாறு 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


91  ஆயிரம் பேர் சேர்ந்தால் அனைத்தும் நடக்கும்!

நல்ல மனம்பல தேவை - இந்த 1
நாலரைக் கோடித் தமிழரைக் காக்க!
சொல்லும் செயலும் பொருந்தும் - பல
சோர்வற்ற உள்ளங்கள் பற்பல வேண்டும்!

அல்லும் பகலும் நினைக்கும் - பலஆர்வங்கொள் 2
நெஞ்சங்கள் ஒருங்குறச் சேர்ந்து
வெல்லும் வினைகளைத் தேடும் - உயிர்
வேட்கை முனைப்புள்ள வேங்கைகள் தேவை!

தன்னல நாட்டமும் இன்றி - ஒரு 3
தலைமைத் துடிப்பும் பொறாமையும் இன்றிக்
கன்னல் தமிழ்நலம் காக்கும் - உயர்
காதல் இளைஞர்கள் இளைஞைகள் தேவை!

ஒப்பிய கொள்கையில் ஒன்றி - உடல் 4
உயிரைத் தருகின்ற வீர உணர்ச்சி,
செப்பிய கட்டளை யேற்றே - உடன்
செய்கின்ற ஆர்வத் துடிப்புடை யோர்கள்,

முப்பது பேர்கள் ஓர் ஊர்க்கு - வந்து 5
மூளுவ ராயின் இங் காளுவர் காதில்
எப்புதுக் கொள்கையும் ஏறும்! - அதை
ஏற்றில ராயிடின் ஆட்சியும் மாறும்!

ஆங்கிலம் பிழைபடப் பேசில் - பலர் 6
அருவருப் படைகுவர்; ஆயின்செந் தமிழில்,
தீங்குளங் கொண்டவர் சில்லோர் - பிழை
சேர்ப்பதை நமில்சிலர் மார்தட்டிக் கேட்டால்,

பாங்குறும் செந்தமிழ் தாழ்ந்து - பல 7
பட்டடைப் பழங்கடைக் குப்பையைப் போல
நீங்கிலா இழிவுகள் சேர்மோ? - இன்று
நின்றேனும் தமிழ்நலங் காத்திடல் வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/186&oldid=1424789" இலிருந்து மீள்விக்கப்பட்டது