பக்கம்:கனிச்சாறு 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  152


93  நாட்டின் கீழ்நிலைக்குக் கரணியமாவார் எவர் ?

நாட்டுக்கு நன்னிலை வாய்த்திட வில்லையா?
நாளுக்கு நாள், அது தாழ்வதும் உண்மையா?
கேட்டுக்குக் கரணியம் எவர்? - என்று கேளுங்கள்!
கீழ்நிலை வாழ்கின்ற மக்களா? இல்லையே!
கூட்டுக்குள் உயிரொடு கூழுக்கிங் கலைந்திடுங்
கூன்செறி மக்களோ, நல்லவர்! நல்லவர்!
பூட்டுக்குக் காவலாய்ப் பூனைக்குத் தோழனாய்ப்
பொய்யுரைத் திளிக்கின்ற அரசியல் புரட்டரே!

தப்பாமல் திட்டங்கள் சட்டங்கள் செய்யினும்
தாழ்ச்சியும் வீழ்ச்சியும் தவிர்ந்திட வில்லையா?
எப்போதும் இந்நிலைக்(கு) ஏது, எவர் தெரியுமா?
ஏழ்மையில் மிதக்கின்ற மக்களா? இல்லையே!
முப்போதும் உழைத்தாலும் முழத்துணிக் கலைகின்ற
மூங்கைவாய் மக்களோ, நல்லவர்! நல்லவர்!
ஒப்போலை பெற்றபின் ஊர்தியில் உலாவந்(து)
ஊரை உறிஞ்சிடும் அரசியல் உலுத்தரே!

கோடிபல் கோடியாய் வரிகளைத் தண்டியும்
கொடுமையும் கடுமையும் மறைந்திட வில்லையா?
மூடி மறைக்காமல் கேளுங்கள், கரணியம்!
முன்னேறத் தெரியாத மக்களா? இல்லையே!
வாடி வதங்கிடும் கள்ளமில் - கவடுமில் -
வாய்மைசேர் மக்களோ, நல்லவர்! நல்லவர்!
கூடியே நல்லுரை கூறி, அம் மக்களைக்
கொள்ளை யடித்திடும் அரசியல் கொடியரே!

பாலமும் அணைகளும் பன்னூறு கட்டியும்
பாழ்மையும் ஏழ்மையும் அழிந்திட வில்லையா?
ஓலமும் அழுகையும் ஏன்? - என உணருங்கள்!
உழைக்கின்ற கூட்டமா, கரணியம்? இல்லையே!
காலமும் ஏழ்மையில் கண்ணீர் வடித்திடும்
கல்லாத மக்களோ, நல்லவர்! நல்லவர்!
மூலமும் முடிவுமாய் வெற்றுரை பேசியே
முகமன் விரும்பிடும் அரசியல் எத்தரே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/189&oldid=1424800" இலிருந்து மீள்விக்கப்பட்டது