பக்கம்:கனிச்சாறு 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


98

கதவு திறந்தது!


கதவு திறந்தது;
கதிர்வான் எழுந்தது;
கால் நடை கொண்டது, கடும்பணிக்கே!
உதவும் உளங்கள் ஒன்றின; மீண்டும்
உயிர்த்தேன் தமிழெனும் கண்மணிக்கே!

பழஞ்சுவர் இடிந்தது;
பாதை தெரிந்தது;
பம்பரக் கால்களும் சுழல் தொடங்கும்!
இழந்தபல் காட்சிகள் இறவா நினைவுகள்
இயங்கின; பகையோ போய் முடங்கும்!

கம்பிகள் தெறித்தன;
விலங்குகள் கழன்றன!
காவல் நெருக்குகள் எனைவிலகும்!
தும்பிகள் வந்தன; துந்துபி முழங்கின!
தோலா முயற்சிகள் நடைஉலவும்!

வானம் அசைந்தது;
மரங்கள் எதிர்ந்தன;
வழிசுழன் றது;ஓ! நடக்கின்றேன்!
மானம் நிமிர்ந்தது; மார்பும் விரிந்தது!
மலை, வயல் வெளி; ஆறு கடக்கின்றேன்!

கண்கள் மலர்ந்தன!
கைகள் அசைந்தன!
கருத்து மிதந்தன காற்றினிலே!
பண்களுந் தமிழே! பாடலுந் தமிழே!
பயில்நா டகம் உயிர் ஊற்றினிலே!

ஆண்டா நடந்தது?
அணுச்சிதை வில்லை!
அடடா, உயிர், உளம் உடலினிலே!
பூண்டஎன் கோள் நலம்! புதுமைத் தோள் நலம்!
புதுப்புது விளைவுகள் நடையினிலே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/194&oldid=1437567" இலிருந்து மீள்விக்கப்பட்டது