பக்கம்:கனிச்சாறு 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 159


99

பழந்தமிழ் இனமே! பழந்தமிழ் இனமே!


பழந்தமிழ் இனமே! பழந்தமிழ் இனமே!
விழுந்து கிடந்த வெறித்துயில் நீங்கி,
இழந்த பெருமையை இனிமே லாகிலும்
உழந்து தேடி ஒருநிலைப் படுத்த
எழுந்துலாப் போந்த பழந்தமிழ் இனமே!

கொழுந்துவிட் டெறிந்தவுன் அறிவுக் கூர்மையும்
செழுந்தண் மொழியும் செறிந்த சிறப்பும்
உழுந்தள வாகி உருக்குலைந் திட்டே
அழுந்திப் போன அவல வாழ்க்கையில்,
முழந்துணி யின்றி மூங்கைப் பட்டும் -
ஒருபுகல் இன்றி உலகம் ஓடியும் -
தெருவுறு நாயென அடிமை தேடியும் -

இன்னும் - உன்றன் இனந்தனைக் காட்டித்
தின்னும் வழக்கம் தீர்ந்தனை இலையே!
- இன்னும் உன்றன் இழிந்த சாதியை
உன்னும் மனச்செருக் கொழிந்தனை இலையே!
- இன்னும் உன்றன் தாய்மொழித் தமிழ்மேல்
மன்னும் பெருமை மதித்தனை இலையே!
- இன்னும் உன்றன் மதஇழி வுகளைப்
பின்னும் மடமைப் பிணிஒழிந் திலையே!

- அன்ன வாறே அழுந்தி, நீ இருந்தே
என்ன வாறாய் இழந்த பெருமையை
மீட்டிடப் போந்தனை? தமிழின மேன்மை
ஈட்டிடப் போந்தனை? எண்ணுக நன்றே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/195&oldid=1437501" இலிருந்து மீள்விக்கப்பட்டது