பக்கம்:கனிச்சாறு 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


100

சோற்றிடை மானம் !


வருவீர் தமிழரீர்! வருவீர் தமிழரீர்!
திருவீறும் நந்தமிழ் தெருத்தமிழ் ஆகி
ஒருவர் வாயினும் உயிர்ப்பின்றி ஒலிக்குமால்!
ஒருவர் வாயினும் உயிர்ப்பின்றி ஒலிக்குமேல்
கருவழிந்து போகாதோ? ஆகலின் காத்தற்கு
வருவீர் தமிழரீர் வருவீர் தமிழரீர்!

வம்மின் புலவரீர்! வம்மின் புலவரீர்!
செம்மாந் தெழுந்தநம் செந்தமிழ் செழிப்பின்றி
விம்ம லுற்றழ வீதிவாய்க் கிடக்குமால்!
விம்ம லுற்றழ வீதிவாய்க் கிடக்குமேல்
நம்மவர் உய்வரோ? ஆகலின் நயத்தற்கு
வம்மின் புலவரீர்! வம்மின் புலவரீர்!

எழுவீர் இளைஞரீர்! எழுவீர் இஞைரீர்!
தொழுதகை நந்தமிழ் தூய்தகை யிழந்தே
இழிதகைப் பட்டாங்கு எழில்கெடச் சிதையுமால்!
இழிதகைப் பட்டாங்கு எழில்கெடச் சிதையுமேல்
அழிவும் நமக்கன்றோ? ஆகலின் அதுபேண
எழுவீர் இளைஞரீர்! எழுவீர் இளைஞரீர்!

கூடுக மகளிரீர்! கூடுக மகளிரீர்!
பீடுறு நந்தமிழ் பிழைபடச் சாம்பியே
ஆடுகள மகள் போல் அரணழிந் திழியுமால்!
ஆடுகள மகள் போல் அரணழிந் திழியுமேல்
நாடுவ தெதனையோ? ஆகலின் நலந்தரக்
கூடுக மகளிரீர்! கூடுக மகளிரீர்!

செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!
முந்துயிர்த் தெழுந்த, நஞ் செந்தமிழ் இனமே!
எந்த நடையதும் ஏற்றிடத் துணிவதோ?
எந்த நடையதும் ஏற்றிடத் துணிந்தவர்
சொந்த நடையதும் மறந்தது காணிரோ?
சோற்றிடை மானம் அழிந்ததும் காணிரோ?

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/196&oldid=1437568" இலிருந்து மீள்விக்கப்பட்டது