பக்கம்:கனிச்சாறு 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


102

இனக்கொலைக் கொடியனை
ஏனிங்குப் பெற்றனை?


செந்தமிழ்த் தாயே! செந்தமிழ்த் தாயே!
சேய்எனக் குரைசெய், செந்தமிழ்த் தாயே!
எந்தமிழ் மண்ணில் இருப்பவர் பலருள்
ஏற்றமில் லாமல் இருப்பவன் தமிழன்!
சொந்தநன் மொழிநலச் சுரணையும் இல்லான்;
சொந்த, தன் இனத்தையே சுரண்டலும் செய்வான்!
இந்தவோர் இழிமன இனக்கொலைக் கொடியனை
ஏனிங்குப் பெற்றனை, இன்தமிழ்த் தாயே?

புட்களும் விலங்கும் போக்கை மறந்தில;
புன்மைத் தமிழனோ புலத்தையே மறந்தான்!
துட்கவும் இல்லான்; துணுக்குறு கில்லான்;
தூசள வும்இனப் பாசமும் இல்லான்!
மட்கிய குப்பையன்; மல்லார்ந்த ஆமையன்!
மானமும் நாணமும் மாண்புடன் மறந்து
வெட்கங் கெட்ட விலைமகன் இவனை
வீணில் பெற்றதேன், வியன் தமிழ்த் தாயே?

கண்டவை எழுதிக் கயமையை வித்திக்
காசையும் மாசையும் கவினுறக் குவித்துப்
பெண்டையும் பிள்ளையும் பிணையலாய் வைத்துப்
பீற்றற் பதவியும் பட்டமும் பெற்றுத்
துண்டையும் துணுக்கையும் தொடர்பிலா துரைத்துத்
தொலையாச் சொற்பொழி வாளனாய்த் திரியும் -
முண்டையும் பெறாத - மூங்கையன் இவனை
முனைந்தேன் பெற்றனை, முத்தமிழ்த் தாயே!

முன்னையும் பின்னையும் மூடர்கள் தொடர,
மூளைச் சலவையர் முன்னடி விழுந்தெழப்
பொன்னையும் பொருளையும் பொங்கித் தின்றிடட்
பூச்சியாய்ப் புழுவாய்ட் புன்மைக் கொப்பியே
தன்னையும் தன்னுடைத் தந்தை தாயையும்
தாழ்ச்சிய சத்தையில் தமுக்கடித் திழப்பவன்
என்னையிங் குயர்வினை எய்துவான் என்று நீ
ஈன்று மகிழ்ந்தனை எந்தமிழ்த் தாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/198&oldid=1437570" இலிருந்து மீள்விக்கப்பட்டது