பக்கம்:கனிச்சாறு 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

க௯


30. தமிழுருவில் தமிழ்ப் பகைவர்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்.

31. எத்தனை எத்தனைத் துன்பங்கள்தாம் அடுக்கடுக்காக வந்தாலும், கொள்கையில் வலிவானவர்கள் மாறிவிடப் போகிறார்களா என்ன?

32. தமிழர் எழுச்சியுற்றனர். பகையே நீ விலகு என்பது இது.

33. தமிழ் மக்கள்தாம் அடிமைகள் என்றில்லை; தமிழ் மக்களை ஆள்பவர்களும் அடிமைகளாகவே இருக்கின்றார்கள்.

34. தமிழை வளர்ப்பவர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் எத்துணை அழிவுகள் செய்கின்றனர்!

35. இழிவாக எழுதிப் பிழைத்திடும் இடக்கரும், அவற்றைப் பதித்திடும் புல்லியரும் தொலைந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இத்தமிழகம் எழில் வீசித் திகழும்.

36. உண்மையான தமிழன் இறந்து போய்விட்டான் என்று கருதி அவனுக்கு ஒப்பாரியாகப் பாடிய பாடல் இது.

37. இங்குள்ள மூடர்கள் உண்மையான தொண்டர்களுக்குப் பல வகையான இடர்ப்பாடுகளைச் செய்யத் துணிந்துவிட்டனர். பொய் புளுகு கூறிக் கயமையைக் கூறிக் கவிழ்த்துவிடுகின்றனர். அவற்றுக்கெல்லாம் மெய்த் தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டா என்பது இது.

38. மெய்ம்மையில் மிளிர்ந்தவர்கள் பொய்க்கு வளைந்து கொடுக்க மாட்டார்கள் என்பது இது.

39. இந்தப் பாடலுக்காகத் தமிழர் ஒருவர் பாவலரேற்றின்மேல் வழக்குப் போடுவேன் என்று மிரட்டினார். அதில் ஒன்றுமில்லை. தமிழனுடைய இன்றைய இழிநிலைகள் சுருக்கமாகச் சுட்டப்பெற்றிருக்கின்றன. அவ்வளவுதான்.

40. பொதுத்தொண்டர்களில் போலியானவர்கள் எப்படியிருப்பார்கள்? பத்துப் பாடல்களில் அடையாளங் காட்டப்படுகிறது.

41. பாவலரேறுவின் தமிழகப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட வேண்டும் என வேண்டிப் பிரிவினை இயல்வதொன்றா என்று ஐயம் எழுப்பிய அன்பர் ஒருவரின் மடலுக்கு விடையாக எழுதப் பெற்றது இப்பாட்டு.

42. தமிழர் உள்ளம் பூத்துப் பொலியட்டும் என்று வாழ்த்துக் கூறுகிறது இப்பாடல்.

43. ஒரு முரசு முழக்கு.

44. மானத்தை இலச்சினையாகப் பொறித்த தமிழ்க்கொடியை ஊன்றுங்கள் என்றது.

45. என்றைக்கு உண்மைத் தமிழர் அரசேற்றுச் செய்தக்க வினைகள் செய்து நாட்டைச் செழுமைக்குக் கொணர்வர் என்று ஏங்குகிறது நெஞ்சம்.

46. அரசியலாளர்களுடைய குழப்ப நிலைகளைப் பற்றிய ஒரு படப்பிடிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/20&oldid=1437275" இலிருந்து மீள்விக்கப்பட்டது