பக்கம்:கனிச்சாறு 2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 165


105

வழியைப் பற்றி வருவாய்!


வானும் கதிரும் நிலைதிரிந்தே - ஒரு
வன்மை நெருப்பாய் நிலம் உமிழ்ந்து
கானும் கடலும் உருவாகிப் - பெருங்
கல்லும் பொடிந்து மண்ணாகி,
ஊனும் உயிரும் தோன்றுகையில் - ஓர்
ஒற்றைத் தமிழா நீ பிறந்தாய்!
கூனும் நிமிர்ந்தாய்! மொழிவிளர்ந்தாய் - பெருங்
குன்றும் காவும் நடை கடந்தாய்!

மனமும் கண்டாய்! ஒளிகண்டாய்! - இம்
மண்ணும் விண்ணும் நீயளந்தாய்!
இனமும் பெருகி மொழி பல்கி - உல
கெல்லாம் திரிந்தாய்! நீ விரிந்தாய்!
புனமும் புலமும் உழவெடுத்தாய் - பெரும்
புலமை இலக்கியத் திறம்பெற்றாய்!
கனமும் இரும்பும் நீகண்டாய்! - வினைக்
கருவிகள் செய்தாய்; வாழ்ந்திருந்தாய்!

முறைகள் கண்டாய்; நெறிகண்டாய் - வளம்
மூத்தாய்; வாழ்க்கை அறங்கண்டாய்!
குறைகள் தெளிந்தாய்; அறிவுயர்ந்தாய் - கலைக்
கூறுகள் கண்டாய்; புலனுயர்ந்தாய் - இம்
மண்ணும் விண்ணும் தொடர்பறிந்தாய்!
இறைமை நேர்ந்தாய்; பொறிகழன்றாய் - உள
ஏற்றம் பெற்றாய்! உள்ளறிந்தாய்!

ஏற்றம் பெற்றும் அறிவுயர்ந்தும் - நிலை
இழிந்தும் தாழ்ந்தும் கிடக்கின்றாய்!
தோற்றம் சிறந்தும் உயர்விருந்தும் - உன்
தொன்மை மறந்தே உழல்கின்றாய்!
வேற்றினம் உன்னை இழித்ததுகாண்! - பெரும்
வெற்றிக் குவிப்பை அழித்ததுகாண்!
மாற்றம் பெறவும் விரும்புகிலாய் - தமிழ்
மகனே! விழிப்பாய்! எழுந்துயர்வாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/201&oldid=1437573" இலிருந்து மீள்விக்கப்பட்டது