பக்கம்:கனிச்சாறு 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


மொழியைச் சிதைத்தாய் விழியிழந்தாய்! - நலம்
முழுதும் அழிந்தாய் பண்பிழந்தாய்!
பழியைச் சுமந்தாய்; அரசிழந்தாய்! - பெரும்
பகட்டில் திரிந்தாய்; புகழிழந்தாய்!
குழியைக் குன்றெனக் கால்வைத்தாய்! - உயர்
கொள்கை தவிர்த்தாய்! குழிவிழுந்தாய்!
வழியைப் பற்றி வருவாயோ? - நல்
வாழ்வும் பெற்றே உயர்வாயோ?

-1980


106

இன்றுள்ள நிலையில்
எவ்வகைத் தொண்டும் பயனளிக்காது!


செய்தியிதழ் நடத்துகின்ற திருகுதா ளக்காரர்
செந்தமிழைத் தீய்க்கும் மட்டும்
பொய்தெறிக்கப் பேசுகின்ற அரசியல் எத்தர்களின்
புரட்டுகள் ஒழியும் மட்டும் -
எய்திவரும் பொதுமைநலன் சீர்திருத்த மேம்பாடும்
இற்றிற்று வீழ்வ தல்லால்,
உய்தியில்லை செந்தமிழ்க்கே உருவாகும் தமிழர் நலம்
உருப்படப் போவ திலையே!

சோற்றுக்கும் காசுக்கும் சொல்மாறி அறிஞர்குழாம்
சொந்தநலன் பேணும் வரைக்கும்
கூற்றுக்கும் கொடியவராய்த் தலைவர்களின் கோமாளிக்
கொடுவினைகள் தீரும் வரைக்கும்
ஆற்றிவரும் தமிழ்த்தொண்டில் ஆகிவரும் சிறப்பியல்கள்
அற்றற்று வீழ்வ தல்லால்,
மாற்றமில்லை தமிழ்நாட்டில்! மதிப்பில்லை செந்தமிழ்க்கு;
மக்கள் நலம் சேர்வ திலையே!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/202&oldid=1437575" இலிருந்து மீள்விக்கப்பட்டது