பக்கம்:கனிச்சாறு 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 167


107

நலிந்துவரும் தமிழினத்தின் நலங் காப்போமே!


மொழியிலையேல் இனமில்லை; இனமிலையேல் நிலமில்லை;
முழுவுண்மை; இஃதறியா மூட ரெல்லாம்
விழியிலர்போல், அடிமைகள் போல், தமிழினத்தை விடிவிக்க
வைப்பவர்போல் பற்பலவும் விதந்து கூறி,
வழியறியா வழிகளிலே மக்களினைப் பலகூறாய்ப்
பலகுழுவாய்ப் பலகொடிக்கீழ் வகுத்துக் கொண்டு
பழிமலிய அரசியலை நடத்துகின்றார்; பொருளியலைப்
பெருக்குகின்றார்! தமிழ்நாட்டைப் பாழ்செய் வாரே!

செந்தமிழைச் செந்தமிழர் பேரினத்தைச் செந்தமிழ்நன்
னாட்டை, இவர் போட்டியிட்டுச் சீரழித்தே,
இந்திக்கும் வடவர்க்கும் தில்லியரின் ஆட்சிக்கும்
என்றென்றும் அடிமையென ஈடு வைத்தே,
தந்தம்நலம், பதவி, அதி காரமிவை தாம்பெறவும்
தமக்குப்பின் தம்மக்கள் பெறவும் செய்யும்
தந்திரத்தை அரசியலென் றுரைக்கின்றார்; எழுதுகின்றார்!
தமிழினமே! தாயினமே! விழிப்புக் கொள்க!

வடமொழியை ஆங்கிலத்தை இந்தியினைத் தாய்தமிழில்
வளவளென முலமுலெனக் கலந்து பேசும்
முடமொழியைத் தமிழென்று முழங்குகின்றார்! இவர்தாமோ
முத்தமிழ்க்கும் இனத்திற்கும் காவல் செய்வார்?
படமொழியில் பேச்சாளர் படுகொச்சை எழுத்தாளர்.,
பச்சைமொழிப் பாவலர்கள் வாழும் நாளில்
நடமிடுவோம் தமிழகத்தில்! நாம் செய்த வினையறியோம்!
நலிந்துவரும் தமிழினத்தின் நலங்காப் போமே!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/203&oldid=1437577" இலிருந்து மீள்விக்கப்பட்டது