பக்கம்:கனிச்சாறு 2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


113

கெடுதலை உலகம்!


கெடுதலை நிரம்பிய உலகமிது - அதன்
கீழ்மையை வேரறுப்போம் - மக்கள்
விடுதலை பெற்றுய்ய வேண்டுமன்றோ - மூட
வழக்கத்தை நாருரிப்போம்! (கெடுதலை)

மடுவும் மலைகளும் மக்கள் நிலையினில்
மண்டிக் கிடப்பதுவோ - நலங்
கெடவும் உயிர்க்குலம் இங்கொரு மூலையில்
கிடந்து துடிப்பதுவோ? (கெடுதலை)

வானுயர் கூடங்கள் மாடங்கள் ஓர்புறம்!
வாழ்க்கை நலன்கள் பல - அட!
ஊனுடல் நாறும் எலும்புகள் ஓர்புறம்!
உப்பும் புளியும் இல! (கெடுதலை)

சாதி மதங்களும் சாத்திரப் பேய்களும்
சழக்கர்கள் சூழ்ச்சிகளாம்! - தலை
மோதி உடைவதும் மேன்மை குலைவதும்
செந்தமிழ் வீழ்ச்சிகளாம்! (கெடுதலை)

ஆண்டிட வந்தவர் மக்கட் பயிர்களை
அழுகிடச் செய்தனரே! - பலர்
மாண்டிடத் தாம்வளம் பூண்டனர்; ஏழையர்
வாழ்க்கையைக் கொய்தனரே! (கெடுதலை)

மேன்மைதருந் தொழிலாளர் இனங்களை
வேறுபடுத்தினரே! - கொடுங்
கோன்மை புகுத்தி உரிமை எழுச்சியின்
குரலை நெரித்தனரே! (கெடுதலை)

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/210&oldid=1437585" இலிருந்து மீள்விக்கப்பட்டது