பக்கம்:கனிச்சாறு 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 179


117

மொழி, இனம், நாடு!


மொழி, இனம், நாடு - உயர்
முன்னேற்றம் தேடு! - பெரும்
பழியறியாத் தமிழர் புகழ்
பண்ணமைத்துப் பாடு! (மொழி)

அழிவு செய்யும் தீமைகளை
ஆழப்புதைப் போமே! - நன்மை
சூழவிதைப் போமே!

இழிவு கூறும் சாதிமத
இன்னல் அழிப்போமே! - சூழும்
இடர்கள் ஒழிப்போமே! (மொழி)

பொதுமை நலம் பூத்திட - ஓர்
புரட்சி காணுவோமே! - பெரும்
புதுமை பூணுவோமே!

புதுமை வளம் அறிவு பெருக
போக்கை மாற்றுவோமே! - சம
நோக்கை ஏற்றுவோமே! (மொழி)

நலிவு சேர்க்கும் மடமைகளை
நடுவில் வைத்துக் கொளுத்துவோம் - நல்
லறிவை நாளும் வழுத்துவோம்!

வலிவுதேக்கும் தாய்மைத்தமிழை
வாழ வைத்துப் போற்றுவோம்! - நம்
வாழ்வில் ஒளியை ஏற்றுவோம்! (மொழி)

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/215&oldid=1437593" இலிருந்து மீள்விக்கப்பட்டது