பக்கம்:கனிச்சாறு 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  183


தமிழின் உணர்வைத் தட்டி யெழுப்பி
அமிழாத இனநலம் ஆக்கிட வில்லையா?

ஆரியர் செய்த அழிம்புகள் யாவையும்
கூரிய உரைகளால் கொன்றிட வில்லையா?

பார்ப்பனச் சூழ்ச்சியைப் பகுத்துக் காட்டி
ஆர்ப்புற் றெழும் உணர் வளித்திட வில்லையா?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாக
நாயினுங் கேடாய் நந்தமிழ்ப் பேரினம்

நலிக்கப் பட்டும் நசுக்கப் பட்டும்
மெலிக்கப் பட்டும் மேலே றாமல் 110
கிடந்த கீழ்மையைக் களைந்து காட்டி
அடர்ந்தவர் எழுந்திட அளிதர வில்லையா?

பெரியார் உரைகளும் பெறற்கருந் தொண்டும்
உரிய பொழுதில் உதவிட விலையெனில்
தமிழினம் விழித்திடும் தகைவுநேர்ந் திருக்குமா?
ஆரியச் சேற்றினுள் அழுந்தித் தமிழன்
வீரியம் குன்றி மூச்சு விளர்ந்து
புதைக்கப் பட்டுப் போயிருக் கானா?
சிதைக்கப் பட்டிருக் காதா அவன் இனம்?

இவையெலாம் நேர்ந்திட வில்லையே என்ற 120
நகையுறு ஏக்க நலிவினால் அன்றோ
காஞ்சிச் சின்னவாள் கதைத்துத் திரிகிறார்?
பூஞ்சையாய்ப் போன புல்லுரை புகல்கிறார்?

பெரியார் ஊன்றிய நச்சு விதைகளால்
அரிய விளைவே அற்றுப் போகி
நாடே கெட்டு விட்டதாய் நவில்கிறார்!
நாடென்ன இவரது பாட்டனின் ஈட்டமா?
நாடு கெட்டால் நமக்கிது தகாதென
ஓடிட வேண்டுவ தன்றோ உயர்ந்தது!

நாடு கெட்டதா? பார்ப்பனர் நாட்டிய 130
கேடு கெட்டதா? எஃது இங்குக் கெட்டது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/219&oldid=1437415" இலிருந்து மீள்விக்கப்பட்டது