பக்கம்:கனிச்சாறு 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


பட்டி மன்றமாய்ப் பாட்டரங் குகளாய்
வெட்டிப் பேச்சொடு விலாவலி யெடுக்க
ஆர வாரம் செய்கிறோம்! அவருடை
வீர உளத்தினை விளையாட் டரங்கமாய்
மாற்றி நம்மையும் மாய்த்துக் கொள்கிறோம்!
ஏற்றிப் போற்றியே அறிவை இகழ்கிறோம்!

பெரியார் உணர்வினைப் பாவேந்தர் பீடினை
அறியாத் தமிழராய், ஐயகோ; அழிகிறோம்!
தமிழர் இனமே! தாழ்ந்துமே இனமே!
இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும்
அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே!

-1983


125

என்னினும் என்ன, இன்று
இவர்கள் அடிமைகள் !


முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்!
மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்!
தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்!
திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்!
இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்!
இந்திய - நாவலந் தேயத்து இறைமையர்!
என்ன வியப்படா? - இவர்கள் தமிழர்கள்!
என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/228&oldid=1437428" இலிருந்து மீள்விக்கப்பட்டது