பக்கம்:கனிச்சாறு 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


128

தமிழ நெஞ்சே!


பனியும்,மா மழையும், பட்டப்
பகல், இராப் பொழுதும் ஓடித்
தனியனாய் அலைந்தாய்; சொன்னாய்!
தணல்போல எழுதித் தீர்த்தாய்!
கனியுமா றில்லை; நம்மோர்
கருத்தறி புலனும் இல்லை!
இனியுமா விடியும் என்றே
எண்ணுவாய், தமிழ நெஞ்சே!

மன்னுமாத் தமிழும் வாழ்வும்
மறைந்துள வரலா றெல்லாம்
உன்னுமா றெம்ம வர்க்கே
உணர்த்தினும் கொள்வா ரில்லை!
தின்னுமா றுறங்கு மாறு
திரிகின்ற தமிழர் கூட்டம்
இன்னுமா எழுமென் றிங்கே
இருக்கின்றாய், தமிழ நெஞ்சே!

மாண்ட,மா நாக ரீகம்
மன்னிய பண்பா டெல்லாம்
தூண்டுமா றுணர்வுச் சொல்லால்
துலக்கிடக் கால் நூற் றாண்டாய்
வேண்டுமா றுணர்த்தி விட்டாய்!
விளைவொன்றும் கண்டா யில்லை!
மீண்டுமா உழைப்ப தற்கே
வீறுவாய், தமிழ நெஞ்சே!

ஞாலமா மாந்தர்க் கெல்லாம்
நல்லொளி பரப்பி, ஓசை
மூலமா நின்ற நந்தாய்
மொழிப்புலம் விளங்கக் காட்டி
ஏலுமா றுரைத்தாய்! ஆனால்
ஏற்பதற் காரிங் குள்ளார்?
மேலுமா தொண்டு செய்ய
மீறுவாய், தமிழ நெஞ்சே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/232&oldid=1437432" இலிருந்து மீள்விக்கப்பட்டது