பக்கம்:கனிச்சாறு 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  199


129

என்று நினைப்பாயோ?


என்று நினைப்பாயோ? - இன
ஏற்றம் விளைப்பாயோ? - தம்பி
அன்று பிறந்த நம் செந்தமிழ்க் காக்கம்
என்று நினைப்பாயோ? - இன
ஏற்றம் விளைப்பாயோ?


நன்றெண்ணிப் பாராடா தம்பி! - தமிழ்
நாடின்று உலகினில் தாழ்ந்தது வெம்பி!
இன்றதை உயர்த்தாமல் போனாய் - நீ
இருந்ததைக் கதையென்று படிப்பார்கள் வீணாய்! (என்று)

குன்றதும் தாழ்பள்ளம் ஆகும் - பலர்
குழிவெட்டி மண்கொண்டு கல்கொண்டு போனால்!
வென்றவர் தோற்பதோ, இங்கே உன்
வீரமும் விளைவதும் போயின எங்கே? (என்று)

மொழியினை இனத்தினைக் காப்பாய் - நம்
மொய்ம்பினை நாட்டினை இன்றே நீ மீட்பாய்!
விழியினை ஒப்பது மொழியாம் - அது
வீழ்ந்திடில் தாழ்ந்திடில் நமக்கேது வழியாம்! (என்று)

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/235&oldid=1437435" இலிருந்து மீள்விக்கப்பட்டது