பக்கம்:கனிச்சாறு 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


134

குற்றச்சாட்டாம், நடவடிக்கைகளாம்!


குற்றச் சாட்டாம்! நடவடிக்கைகளாம்!
குத்திப் பார்க்கிற தரசு! - என்னைக்
குலுக்கிப் பார்க்கிற தாட்சி!
வெற்றுச் சொல்லா, வீணெனும் எழுத்தா
விளைவித் துள்ளேன் நாட்டில்? - பல
வீறுரை சொன்னேன் ஏட்டில்!

தமிழர் இனத்தைத் தமிழன் காக்கத்
தடையென் னடா,ஓய், இங்கே? - மனம்
தயங்கேன்! அதுவென் பங்கே!
உமிழத் தக்கார் பலருளர் எனினும்
உண்டடா மறவரும் என்போல்! - தமிழ்
உறவைக் காப்போம் கண்போல்!

சிறையில் வைத்துச் சிறகை அரிந்து
சீர்குலைத் தாலும் என்கை - வினை
செய்யும் எழுதுமென் பங்கை!
முறையாய்ச் செய்யும் தொண்டுக் கிங்கே
முட்டுக் கட்டைகள் போட்டால் - ஒரு
முடிவும் காண்போம் வேட்டால்!

உரிமை முழக்கம் அதிகா ரத்தால்
ஒழிந்து போவதும் உண்டோ? - உளம்
உடைவதற் கென்ன, கல் துண்டோ?
சரிமை நிகராம் குடியர சாட்சி
சழக்கரின் வீட்டு உரி நெய்யோ? - பிறர்
சாவதும் வீழ்வதும் பொய்யோ?

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/240&oldid=1437441" இலிருந்து மீள்விக்கப்பட்டது