பக்கம்:கனிச்சாறு 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


136

தொல்பகை வீழ்வன்றோ நம் விழா நாளே!


வழக்கம் போலவே பொங்கல் விழாவும்
வந்தது வந்தது, தமிழருக் கென்று!
முழக்கம் இல்லை; முகிழ்வும் இல்லை;
முழுக்க முழுக்க மழையால் நனைந்தது!
பழக்கம் கருதிச் சிறுசிறு அளவில்
பானைகள் இன்றிப் படையலும் இன்றி,
உழக்கரி சியிலே பொங்கல் மணந்தது!
உளுந்தும் பருப்பும் வடைகளாய் மாறின!

வீணெனும் விழாக்கள் தமிழனின் விலாவை
வில்லாய் வளைத்தே ஒடிக்கின்ற போழ்தில்,
மாணெனும் பெருமைக் குரியவோர் விழாவாய்
மக்களுக் குள்ளே தமிழருக் கென்றே
பூணெனும் படிவுயர் பொங்கல் விழாவே
பொலிந்தது பொலிந்ததிங் கென்னினும், இன்றோ
நாணெனும் உணர்வினை விட்டவ னான
நாயினத் தமிழற்கு வேண்டுமோ, பொங்கல்?

மொழியுணர் வின்றியோர் மொழுக்கை உணர்வினால்
முதுமைத் தமிழ்நலம் முழுவதும் தவிர்த்தே
வழிவழி யாகவே சமசுக் கிருதமும்
வாழ்வதற் குதவியாய் ஆங்கில மொழியும்
இழிமொழி யாமோர் இந்தியும் கற்றிட
இம்மியும் கூச்சமும் மானமும் இல்லான்
பழியறி யாமல் பசுநெல் அரிசியைப்
பாலிற் பொங்கியே உண்ணவும் வேண்டுமோ?

வடக்கு வாணிகன், இடக்குப் பார்ப்பனன்,
வல்லா ளுமைசெய் தில்லியன் - இவர்க்குச்
சடக்கென விழுந்து வணங்கி வணங்கியே
சல்லிக் காசுக்குக் காட்டியும் கொடுத்தே
அடக்க வொடுக்கமாய் அடிமையாய்ப் போனவன்-
‘ஆர்’ எனக் கேட்டால் ‘நானே’ எனும் ஒரு
முடக்குக் கழுதைக்கு விழாவும் வேண்டுமோ?
முழுவிலை மகளுக்கு வளைகாப்பும் தேவையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/242&oldid=1437445" இலிருந்து மீள்விக்கப்பட்டது