பக்கம்:கனிச்சாறு 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


பாட்டும் உரையும் கூறிப் - பெறும்
பயனை எடுத்துக் காட்டி,
நாட்டும் தொண்டில் மக்கள் - பொது
நலத்தை உணர வைப்போம்!
சாதி இழிவு சொல்லி - மதச்
சழக்கை விளக்கிப் பேசி,
ஓதி உணர்த்த வேண்டும்! - மக்கட்
குண்மை கூற வேண்டும்!

-1987


141

புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்குக!


வான ளாவிய செந்தமிழ் வளர்குலம்
வறுமையும் கீழ்மையும் அடிமையும் உற்றதால்
கூன ளாவியும் குறுகியும் சிதைந்துமோர்
குருட்டுச் செவிடனாய்ப் பெருநடை தளர்ந்ததே!
மான மிலாததாய் மற்றவர் முன்னிலை
மண்டி யிட்டுயிர் வாழவும் துணிந்ததே!
ஆன எழுச்சியோ டொன்றி இயங்கினால்
அற்றைப் பெருமையும் சிறப்பும் ஆகுமே!

பூட்டிய இருப்புத் தொடரி தெறித்திடப்
புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்கினால்
கூட்டை யுடைத்தரி மாவும் வெளிப்படும்
கொள்கை போலவே உரிமையும் புலப்படும்!
நீட்டிய உறக்கம் களைந்திங் கெழுகவே
நீணிலம் எங்கணும் வாழ்ந்திடு தமிழினம்!
ஈட்டிய பெரும் பொருள் செல்வர் ஈகுக!
இளைஞர் கூட்டமும் எழுந்துலா வருகவே!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/248&oldid=1437450" இலிருந்து மீள்விக்கப்பட்டது