பக்கம்:கனிச்சாறு 2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  215


144

சோற்றில் நனைந்தனரே – அட,
தொன்மைத் தமிழ்மக்களே!


தட்டுத் தடுமாறி - உயிர்
தள்ளாடித் தள்ளாடி
எந்தமிழ்த் தாயினை
முட்டுக் கொடுத்தேற்றி - மலை
முகட்டினில் வைத்திட
நாளுந் துடிக்கிறேன்!
கட்டுக் குலைந்ததடா - உடல்!
கால்களும் கைகளும்
சோர்வுற் றிளைத்தன!
‘துட்டு’க் கலைந்தனரே! - பகைச்
சோற்றில் நனைந்தனரே! - அட,
தொன்மைத் தமிழ்மக்களே!

மறமும் குலைந்தவராய் - தன்
மானம் இழந்தவராய்,
மதத்தினில் சாதியில்
திறமும் குறைந்தவராய் - பல
தில்லுகள் முல்லுகள்
செய்பவ ராய், நல்ல
அறமும் கை விட்டவராய் - இழி
ஆடலில் பாடலில்
ஆழ்ந்தவ ராய், பல
நிறமாறும் ஓந்தியராய் - பகை
நெட்டடி வீழ்ந்தனரே - அட,
நேயத் தமிழ்மக்களே!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/251&oldid=1437458" இலிருந்து மீள்விக்கப்பட்டது