பக்கம்:கனிச்சாறு 2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


கலைகளும், தொழில்களும் காணி யாட்சியா?
கலை,பண் பாடெனில் இந்திய, ஆரியமா?
தொலைக்காட்சி வானொலி வடவர்க்கே சொந்தமா?
இலையெச்சில் போல் இரண் டொன்று எங்கட்கா?
மக்கள் வரியில் கால் போக்குக்கும் வரவுக்கும்!
முக்கால் பங்கு முட்டாள் தனத்திற்கு! 100

அப்பப்பா! எத்தனை ஆடம் பரங்கள்
செப்புக் காசுக்கும் உதவாத செய்திக்கோ
எத்தனை விழாக்கள்! எத்தனை வேடிக்கை!
பித்தளைப் பயனுக்குத் தங்கப் பிதற்றல்கள் !
கட்சிகள், மதங்கள், கடவுள், சாமிகள்,
நச்சு மனங்கட்கு - நாயனம்! மேளங்கள்!

உழவர், தொழிலாளர் ஒட்டிய வயிற்றுடன்
கழிசடை வாழ்க்கை காண்கையில், கொள்ளையில்
உண்டு களித்தே உலாவரும் அமைச்சர்கள்!
பெண்டு பிள்ளைக்குப் பெரும்பெரும் வளங்கள்! 110

ஓ! இளை ஞர்களே! ஓ! இளை ஞைகளே!
கோயில், குளங்கள், கும்பிடும் சாமிகள்,
அறநிறு வனமெனும் ஆரவா ரங்கள்,
துறவி மடங்கள், தொலையா மதங்கள்,
இன்னின்ன வகைக்கெல்லாம் இந்திய ஆட்சியில்
பொன்னென்ன! பொருளென்ன! பொழுதுக்கும் விழாவென்ன!

மக்கள் என்பார்க்கு மண்ணுதான் உணவு!
தக்க திட்டங்கள் தாள்களில் உரைகளில்!
செயற்பா டெல்லாம் சிக்கல் பிக்கல்கள்!
வயல்விளைவு வான்தொழில் வருவன யாவும் 120
அமைச்சர் களுக்கும் அதிகாரி களுக்கும்
நமைச்சல் தீரா முதலாளி மார்க்கும்
கள்ள வாணிகர், கயமை செய் கலைஞர்
குள்ளத் திருடர், கொள்ளையர், கொலைஞர்
ஆக இவர்க்கெலாம் அளந்து கொடுத்தது
போக, மிஞ்சினால் பொதுமக்கள் தமக்கு!
இந்தியா இதுதான்! எம்நாடும் இதுதான்!
சிந்தியது பொறுக்கிச் சிறந்திடல் எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/282&oldid=1437494" இலிருந்து மீள்விக்கப்பட்டது