பக்கம்:கனிச்சாறு 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


எந்தக் கட்சியில் நீ இருந்தாலும்
இனத்தை மறந்திடாதே! – தமிழா!
இனத்தை மறந்திடாதே! – உன்
சொந்தக் குடும்பம் தனைப்பல கருத்தால்
சுட்டுப் பொசுக்கி டாதே! – தமிழா,
சுட்டுப் பொசுக்கி டாதே!

எந்தத் திசையில் நீ இருந்தாலும்
ஏற்றந் துறந்திடாதே! – தமிழின்
எழிலைத் துறந்திடாதே! – பழங்
கந்தலை யுடுத்துக் கஞ்சியை யருந்தினும்
கனிவை யிழந்தி டாதே! – இனக்
கருத்தை யழித்தி டாதே!

எந்த நிலத்தினில் நீ இருந்தாலும்
இயல்பை மாற்றிடாதே! – இனத்தின்
இணைப்பை யறுத்திடாதே! – உன்
முந்தையர் வாழ்ந்த முதுதமிழ் நாட்டின்
மொழியை மறந்திடாதே – உணர்வை
மூளி யாக்கிடாதே!

எந்தப் படையினில் நீ இருந்தாலும்
இனத்தை எதிர்த்திடாதே! – தமிழா,
எதிரிக் குழைத்திடாதே! – உன்
சொந்தத் தமையனைத் தம்பியைக் கொல்லவே
சூழ்ச்சி நினைந்திடாதே! – பகைவன்
சோற்றில் நனைந்திடாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/287&oldid=1437500" இலிருந்து மீள்விக்கப்பட்டது