பக்கம்:கனிச்சாறு 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உஅ

கனிச்சாறு இரண்டாம் தொகுதி

144.சோற்றில் நனைந்தவராயும், 'துட்டுக்கு' அலைபவராயும், பல நிறம் மாறும் ஓந்தியராயும் தமிழ் மக்கள் மாறிப்போயுள்ளனரே எனக் கவலையுற்றுப் பாடியது இப்பாடல்.
145. ம.கோ.இரா. ஆட்சிக்குபின் நடந்த தேர்தலில் யாரைத் தேர்வு செய்வது என்பதற்கான பாடல் இது. இருக்கின்ற அரசியல் அரம்பர்களில் தமிழின உணர்வை அறிந்த கலைஞர், எரிகின்ற கொள்ளியில் எதிரிக்கு நெருப்பு! - என்பதாய் அரணிடும் பாடல் இது.
146.தேர்தலில் தி.மு.க. அரசு வெற்றி கொண்டதையடுத்து, திரவிட முரசொலி தமிழாய் முழங்கக் கூறிக் கலைஞர் அரசுக்குக் கருத்துரைக்கிறது இப்பாடல்.
147.தமிழ் உணர்வில்லாத பிண்டங்களாய் - உருவங்களாய்த் தமிழர்கள் உள்ளதை எள்ளி - இடித்துரைக்கிறார் பாவலரேறு அவர்கள்.
148.இழிவுகள் வரினும், தொல்லைகள் நேரினும் புறந்தள்ளிப் பொதுஉணர்வொடு வீரராய் நிமிர்ந்து நிகழ்த்துவீர் இனப் போர் - என ஊற்றம் கொடுக்கிறார் ஆசிரியர்.
149. சட்டமன்றத்துள் நாய்ச் சண்டை போல் அரசியலாளர்கள் சண்டையிட்டுக் கொண்ட காட்சி கண்டு ஒழுக்கமிலா இத்தகையோர் இருக்குமட்டும் தேர்தலைத் தவிர்க்க வேண்டுமாய் அழைப்பு விடுக்கிறார் நம் ஐயா!
150.அரசியலாளர்களும், வணிகரும் பிறர் எவரும் தூயதமிழ்க்குத் தொண்டாற்றத் தூண் நிகராய் வரவில்லையே அவ்வகைத் தொண்டாற்றிடும் அன்பரெவர் என வினவுகிறது இப்பாடல்.
151. அமைந்து பெற்றிடலாம் விடுதலை என்று ஊமையராய் அசைவற்றிருப்பதை யொழித்து விசையெழுந்து பாய்ந்ததுபோல் வீறுற்றெழ அழைக்கிறார் பாவலரேறு.
152.தமிழினத்தைத் தூங்கவைத்துத் தொடையினிலே கயிறு திரிக்கின்ற தலைவர்களால் தமிழர்களின் நலிவைக் கண்டு நெஞ்சு புண்ணாகிப் போனதாய்க் கவலுறுகிறார் பாவலரேறு.
153. பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு நினைவையொட்டி இக்கால் தமிழரின் இழிநிலை உணர்த்திப் பாவேந்தர்க்கு மடலாய் எழுதப்பெற்ற பாடல் இது.
154.வருந்தாத வருத்தங்கள் வந்தாலும், நம் இனம் மீட்கத் தொண்டர்கள் புறப்படல் வேண்டும்: பொருந்தாதார் புறம் பெயரல் வேண்டும் என விளக்குகிறார் பாவலரேறு.
155. இந்தியா என்பதும் பார்ப்பனியம் என்பதும் ஒன்றுதான், அவற்றின் செயல்களனைத்தும் தமிழினத்தைச் சீரழிப்பனவே - இவற்றைக் கூர்மையொடு பார்ப்பாரே உணர்வர்; மற்றவர் உணரார் என எச்சரிக்கிறார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/29&oldid=1419502" இலிருந்து மீள்விக்கப்பட்டது