பக்கம்:கனிச்சாறு 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


ஊற்றருகில் காணுகின்ற இன்பம், கொல்லன்
உலைத்தீயில் அடைகின்ற துன்பம், தென்றற்
காற்றினிலே உடல்தோயும் இன்பம், ஆலைக்
கனலினிலே தீய்கின்ற துன்பம், கன்னற்
சாற்றினிலே உவக்கின்ற இனிமை, நைந்த
சோற்றுநீர் தருகின்றதீமை, என்னுந்
தோற்றங்கள் ஒவ்வொன்றும் பாவலர்க்குத்
தொலையாத கனவன்றோ! தேற்றங் காண்பீர்!

-1952




4  தமிழ்க் குலமே!

முன்னர் இருந்தவர் முத்தமிழ் நாடென
முழக்கியது இதைத்தானே? - பெரும்
மன்ன ரெலாம், உயிர்மானம் கொண்டே, புகழ்
மணந்ததிந் நிலந் தானே?

கன்னல் இளந்தமிழ், கண்ணெனக் கொண்டவர்
காத்தது இம்மொழி தானே? - பல
இன்னல் வளைத்திட, இன்னல் வளைத்திட
இகழ்வதும் இதைத் தானே?

முன்னை இருந்தவர் முரசொலி பனிமலை
முகட்டில் ஒலித்த திலையோ? - இங்கு
முன்னிய மரக்கலம் அணிமணி உலகம்
முழுதும் இறைத்ததிலையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/42&oldid=1523574" இலிருந்து மீள்விக்கப்பட்டது