பக்கம்:கனிச்சாறு 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


11  வானம்பாடி!

நைந்தவர் உய்வ தற்கும்,
நலிந்தவர் களிப்பதற்கும்,
பைந்தமிழ் இசையைக் கூட்டிப்
பாடுக வானம் பாடி!
பைந்தமிழ் இசையைக் கூட்டிப்
பாடுங்கால் தமிழர் வாழ
ஐந்துறை முன்னேற் றங்கள்
அறைகின்றேன்; நெஞ்சில் தோய்ப்பாய்!

உள்ளத்தின் உணர்வில், மூச்சில்,
உழைப்பினில், உருவி லெல்லாம்
வெள்ளத்தின் பெருக்கை யொத்து
வெளிப்பட்டு விரைந்து போகிப்,
பள்ளத்தில் தேங்கல் போலப்
பைந்தமிழ் உணர்வு, நெஞ்சைக்
கொள்ளுதல் ஒன்றாம் என்று
கூறுக வானம் பாடி!

கல்லினைச் செதுக்கிக் காட்டிக்
காக்கின்ற கடவுள் என்னும்
புல்லறி வாளர் தம்மின்
பொய்யுரை மாய்ந்து போகச்
சொல்லினில், செயலில், அன்பு
சேர்ந்திட மாந்தர் வாழும்
நல்லறி விரண்டாம் என்று
நாட்டுக வானம் பாடி!

வேதியன் உயிரும், அன்பு
வேளாளன் உயிரும் வேறென்
றோதிய நூல்கள் மாய்ந்தே
உறுதமிழ் நாட்டில் எங்கும்
சாதியின் வேர றுத்துச்
'சரி நிகர் மாந்தர்' என்னும்
சேதியைக் கொளல் மூன் றென்று
நிகழ்த்துக வானம் பாடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/52&oldid=1424649" இலிருந்து மீள்விக்கப்பட்டது