பக்கம்:கனிச்சாறு 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


12  தமிழ்த் திறம் பொறிப்போம்!

தனித்தமிழ் நாட்டினிற் கினி துழைப்போம் - செந்
தமிழரைக் கூவியெம் முடன் அழைப்போம்!
கனித்தமிழ் காத்தெங்கள் உயிர் பிழைப்போம்! - உளக்
கனிவொடும் அறத்தொடும் குலந் தழைப்போம்!

பிறமொழி புகுத்திடும் வழி மறிப்போம் - இதைப்
பித்தர்கள் எதிர்த்திடில் உடல் முறிப்போம்!
பிறவழி அடிமையின் களை பறிப்போம் - நற்
பீடுடைப் பழந்தமிழ்த் திறம் பொறிப்போம்!

பலபடத் திறம்படுங் கலை படிப்போம் - தமிழ்ப்
பண்சிறக் கும்கூத் தியல் நடிப்போம்!
உலகியல் மொழிப்பயன் யாம் வடிப்போம் - இதற்
கூறுசெய் வார்களின் உயிர் குடிப்போம்!

சொல்லிலும் செயலிலும் ஒழுங் கிணைப்போம்! - வளஞ்
சோர்வுடை யாளரைச் சென் றணைப்போம்!
நல்லமைச் சாளர்கள் அர சமைப்போம் - அவர்
நாட்டங்கள் யாவினும் பயன் சமைப்போம்!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/54&oldid=1424651" இலிருந்து மீள்விக்கப்பட்டது