பக்கம்:கனிச்சாறு 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  41


28  தமிழ் காக்க இணைவீர்!

பெற்ற தமிழ்நாட்டைப் பேண மறந்தவர்க்கும்,
உற்ற தமிழ்மகர்க்குச் செந்தமிழ்ப்பால் ஊட்டாமல்
இந்தியெனும் நஞ்சை இசைந்தூட்ட எண்ணுவர்க்கும்,
முந்தைச் சிலம்பெடுத்து மொய்ம்புகழைத் தாம்கூறி
‘விந்தை'த் தமிழரசு வேண்டுமெனச் சாற்றுவர்க்கும்,
'வந்தித் திரவிடத்தில் வாழ்வெடுத்த ஆரியர்கள்,
வட்டிக் கடையால் தமிழர் வளஞ்சுரண்டிக்
கொட்டிக் கொடுபோகும் கொள்ளைப் பணியாக்கள்,
தம்மை விரட்டித் தனித்த திரவிடத்தை
எம்மைக் கொடுத்தும் இனிமீட்பேன்' - என்றுரைத்தே, 10
இற்றைத் தமிழ்நாடே வேண்டிடுவேன் என்பார்க்கும்,
அற்றை வரலாற் றழிவால் இனிப்பொருந்தா
வெற்றுத் திரவிடத்தின் வேட்கை மறவாமல்
ஒற்றைத் தனிக்காலால் நின்றே உயிர்செகுத்தே,
இற்றைக்குக் கொள்கை உரத்தை இடையூழ்த்து
'மற்றைப் படியெதுவும் மாறில்லை' என்றுரைக்கும்
செந்தமிழ் நாட்டுப் பெருங்கழகஞ் சேர்வார்க்கும்,
எந்தமிழ்த் தேசியமே யாம்கேட்போம் என்பார்க்கும்,
சாதி, சமயங்கள் சாற்றுகின்ற பொய்க்கூற்றை
ஓதி உணர்த்திப் பகுத்தறிவை ஊட்டுதற்குத் 20
தன்மதிப்பை நாட்டுந் தனிக்கட்சி கண்டவர்க்கும்,
என்மதிப்புப் பெற்றாலும் ஏழைத் தொழிலாளர்
தாம்மதிப்புக் கொள்நாளே தாமுயரும் நாளென்றே,
ஏமப் பொதுவுடைமை வேண்டிடுவோம் என்பார்க்கும்,
முற்றத் தெளிந்து முடிந்த துணிவுடன்யாம்
உற்ற இறுதிமொழி ஒன்றை உரைத்திடுவோம்!

கற்றுத் தெளிந்தவரே, காணுங் கருத்தறிந்து
சற்றும் பொருத்தமில்லை என்னின் சரிப்படுத்திக்
கூறுவீர் ஆயினுங்கள் கூற்றை உடனேற்று
மாறுவோம்; உங்கள் அருளை மதித்திடுவோம்! 30

பேரளவில் அல்லால் பெருங்கொள்கை என்றமைந்த
வேரளவில் உங்கட்குள் வேற்றுமைகள் இல்லையென்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/77&oldid=1424730" இலிருந்து மீள்விக்கப்பட்டது