பக்கம்:கனிச்சாறு 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

ஒன்றிரண்டு கூறிடினும் உங்கள் வழிமுறையில்-
சென்றுகொண் டுள்ள திசைவழியில் தாமிருக்கும்.
ஊர்திருத்த வேண்டும்; தமிழர் உய வேண்டும்;
ஏர்திருத்த வேண்டும் இவரிலையா கல்வேண்டும்;
கூட்டுறவே வேண்டும்; குலமழிய வேண்டுமெனும்
நாட்டுநலம் பேணுகின்ற நல்லபல நோக்கமாஞ்
சீர்திருத்தக் கூற்றில் சிறுதிருத்தங் கூட, இல்லை!
பேர்திருத்திக் கொண்டால் பிறக்கும் பெருங்கட்சி! 40

செந்தமிழ்த்தாய்க் கென்றும் சிறுமை நினையீர்கள்.
சொந்தத் தமிழ்நாட்டார் சோற்றுக்குத் திண்டாட
வந்தார் வழிப்பறிக்க, வாய்மூட மாட்டீர்கள்!
நொந்தார் தமிழரெனின் நோகுமுங்கள் உள்ளங்கள்!
மாறா திருக்குமுங்கள் போக்கால், மதியாமல்,
வேறோர் படையெடுப்பின் வேற்றுமைகள் தாமறப்பீர்.
உங்கள் உடலில் உயிரில் தமிழ்க்குருதி
பொங்கி வழியும் புலனறிவோம்! நற்றலைவீர்!
செந்தமிழைப் பேசும் திருவாயும், நேர்நெஞ்சும்
எந்தமிழர் சொத்தென்று யாமறிவோம்; ஆனாலும் 50
இற்றைக் கிருக்கும் இழிநிலையை எண்ணிடிலோ
வெற்றுப் பெருமைகளாய் நம்பெருமை வீழ்ந்தொழியும்!
கற்றார் உளக்கொதிப்பால் சொல்லைக் கனலாக்கிச்
சற்றே விரிக்கின்றோம்; சால்பின் செவிமடுப்பீர்;

உற்றுற்றுப் பாத்த்தாலும் உள்ளம் உவப்பதுபோல்
நெற்றுப் பயிராய் நினைவு முதிர்வதுபோல்
செந்தமிழ் நாட்டில் செழுமை துளியுமில்லை;
எந்தமிழர் முன்னேற்றம் என்பதெல்லாம் வெற்றுரையே!

நெய்யில் பொறித்த நிலாப்போலும் அப்பளத்தைக்
கைதாழத் தூக்கித் கனமென்று சொல்வதுபோல் 60
மெய்யாய் உரைக்கின்ற மேலான பொய்யுரையே!
‘உய்யாமல் இல்லையா' என்பீரேல், உண்டுண்டு!
பொய்யில், புரட்டிலிழி 'சாதி'ப் பொருமல்களில்,
வெய்ய கொடுமைகளில் கொள்ளை விளைவுண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/78&oldid=1424731" இலிருந்து மீள்விக்கப்பட்டது