பக்கம்:கனிச்சாறு 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  47


மலைதாழ்ந்து நுண்மணலா மாறிநிலை திரிந்தாலும்,
நிலைதாழாச் செம்மலெனத் தமிழா, நீ வாழ்ந்தனையே;
நிலைதாழாச் செம்மலெனத் தமிழா,நீ வாழ்ந்ததெலாம், 7
புலைதாழா வடவரடி பொறிதாழ்ந்து வீழ்ந்திடவோ?

(வேறு)


கூடிமுர சிருந்தெறிந்து, கவின்பெறுங் குடையிருந்து
முடியடி பகையரசர் மொய்ம்பழித் திறுத்தினையே!
முடியடி பகையரசர் மொய்ம்பழித் திறுத்தியது,
குடிகொலும் வடவரடி குளிர் தமிழ் வீழ்த்திடவோ? 8

இழிவென ஆங்கிலரை எழுந்தெதிர்த் தவராட்சி
பழிநினை வடவரொடும் படையழிய ஓட்டினையே!
பழிநினை வடவரொடும் படையழிய ஓட்டியது,
மொழிவழி அடிமைசெயும் முறையிலார்க் கஞ்சிடவோ? 9

(வேறு)


வடமொழியை ஆங்கிலத்தை வல்லபிற வற்றால்
புடமிடல்போல் செந்தமிழ்க்குப் பொலிவுமிகச் சேர்த்தாய்!
புடமிடல்போல் செந்தமிழ்க்குப் பொலிவுமிகச் சேர்த்து,
மடமிகுந்த இந்தியின் முன் மண்டியிடச் செய்வதுவோ? 10

நிறைகழகப் புலவோரும், நெடுங்கொடிஆள் வேந்தும்,
மறைமலையும் பசுமலையும் மனவிழியால் காத்தார்!
மறைமலையும் பசுமலையும் மனவிழியால் காக்க
குறைமதியால் தமிழ்மகளைக் கொடியவர்கைக் கொடுப்பதுவோ? 11

இறந்தொழிந்த வடமொழியால் எற்றதுயர் ஆறிச்
சிறந்துயரும் பொழுதினிலே சீர்மறந்து போனாய்!
சிறந்துயரும் பொழுதினிலே சீர்மறந்து போனால்,
திறந்தெரிந்த செந்தமிழைத் தெவ்வர்கைப் படுப்பதுவோ! 12

(வேறு)


மூப்பார் தேனை, வளக்கொழுந்தை
முன்னாள் பிறந்த செந்தமிழை,
யாப்பால் பரவி இசைதந்த
யாழே! களிறே! உனைவிளிப்பேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/83&oldid=1424736" இலிருந்து மீள்விக்கப்பட்டது