பக்கம்:கனிச்சாறு 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  49


30  தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர்!

தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர் இருக்கின்றார் - அவர்
தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார்!

உமிழ்ந்ததெல்லாம் நக்கித்தின்னும் நாய்கள் மேல்
உள்ளவர்க்குக் காட்டிக்கொடுக்கும் பேய்கள்! (தமிழ்)

கற்றவர்போல் நடிக்கும்;பழகும் ஒன்றி - ஒரு
காசுக்காக மலமும் தின்னும் பன்றி!
உற்றவர்போல் பேணி வரினும் பழுதை - நன்றி
உணர்விலாது கெடுக்கப் பார்க்கும் கழுதை! (தமிழ்)

கட்சிபேசும்; தலைமை தாங்கும் தமிழால் - பெருங்
கயவர்களின் கூட்டஞ் சேர்க்கும் தமிழால்!
எச்சிலைக்கு நாக்கை நீட்டிப் படுக்கும் - மேல்
இருப்பவர்க்கே இனத்தைக் காட்டிக் கொடுக்கும்! (தமிழ்)

அழைப்பிலாது நமது வீட்டை நண்ணும் - மெய்
அன்பன்போலச் சுவைக்கச் சுவைக்கத் தின்னும்!
உழைப்பிலாது பிழைக்கப் பார்க்கும் ஓரி - தமிழ்க்(கு)
ஊறுசெய்யும் முன்னை யுள்ளம் மாறி! (தமிழ்)

‘மக்கள் போல்வர் கயவர்' என்பர் குறளார்! - அவர்
மாண்பறியார்; கீழ்மை நெஞ்ச இருளார்!
குக்கல் போல வாழ்வார்; கொள்கைக் குள்ளர் - நாளும்
குறும்பு பேசித் திரிவர்; பொய்மைக் கள்ளர்! (தமிழ்)

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/85&oldid=1424738" இலிருந்து மீள்விக்கப்பட்டது