பக்கம்:கனிச்சாறு 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  51

ஈங்கிவர்க்குச் செய்துவந்த எல்லையிலா நன்முயல்வும்
தேங்கிநின்ற நல்லுணர்வும் தீதில் அறவினையும்
காட்டு விலங்குகளின் கூட்டத்திற் காட்டினமால்
ஈட்டும் பெரும்பயனிங் கெத்தனையோ கண்டிருப்போம்: 30

வெம்புலியும் சுற்றிருக்கும்; வல்லரிமா பாட்டெழுதும்!
பம்பும் மலைப்பாம்பும் பண்பாடு பெற்றிருக்கும்!
யானை அரசமைக்கும்; வெங்கரடி யாழிசைக்கும்!
பூனை அறம்பயிற்றும்; புட்களினம் பாட்டிசைக்கும்!
குள்ளநரி ஒற்றாடும்! கோநாய்கள் ஊர்காக்கும்
துள்ளுமிள மான்களினம் தோதாய்க் கலைபயிலும்!
கூன் முயலும் ஆயும்! குரங்கு பொறியியக்கும்!
கானெருமைக் கூட்டமெலாம் கட்சித் தலைமைபெறும்!
ஓட்டக் குதிரை உடல்நலத்தைப் பேண வரும்!
காட்டுக் கழுதையினம் செய்தொழில்கள் கற்றிருக்கும்! 40
ஒட்டை உழவு செயும்! பன்றி பொருள் விற்கும்!
நெட்டைச் சிவிங்கி நெடுமரத்தில் காயுதிர்க்கும்!
ஆக்கள் அறமுரைக்கும்; ஆடுகளும் பாடுழைக்கும்!
நோக்கம் அறிந்து முதலை படகோட்டும்!

இத்தகைய நல்மாற்றம் ஏற்றமுறப் பார்த்திருப்போம்!
சொத்தை மனங்கொண்ட சோம்பேறி மக்களுக்குப்
பல்வா றுழைத்துப் பயன்காணா தேங்கியிரோம்!
செல்வழியும் எண்ணாச் சிறியோர்க் கழுதிருக்கோம்!
உள்ளுணர்வு பேணா உலுத்தர்க்கு நீரிறைத்தே
எள்ளளவும் நல்விளைவு காணா திளைத்திருக்கோம்! 50

செந்தமிழும் மாய்ந்ததுகாண்!
செந்தமிழர் செத்துவிட்டார்!
எந்தவகை அன்னவர்தாம் ஈடேறிப் போவாரோ!

தன்முயல்வும் இன்றித் தனிச்சிறப்பும் ஒன்றின்றி
என்வகையும் தேராதார் எப்படித்தான் வாழ்வாரோ?

உள்ளுணர்வும் சாம்பி உயர்கருத்தும் மாய்ந்தொழிந்து
வெள்ளறிவே கொண்டிருப்பார்
வீழ்ந்திறந்து போவாரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/87&oldid=1424740" இலிருந்து மீள்விக்கப்பட்டது