பக்கம்:கனிச்சாறு 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  53

வேற்றுமைகள் பேசிடுவார்,
வாணிகத்தில் பொய்யளப்பார்
மாற்று வழக்குரைப்பார், மக்களுக்குத் தீங்கிறுப்பார் 80
பொய்ச்சமயம் கூறிடுவார், போலிக் கலைபயில்வார்,
கைச்சரக்கைக் கட்டவிழ்ப்பார், மக்கள் கருத்திழிப்பார்,
மாண்பிறந்து வாழ்வார், மருந்தில் புனல்வார்ப்பார்,
வீண்பகட்டுச் செய்திடுவார், விரகர், கொலைசெய்வார்,
மாசுமிகு புல்லுரைகள் மலிந்துவிட நூல்தருவார்,
கூசுகின்ற தீச்செயல்கள் கூசாமற் கூறிடுவார்,
ஊருழைப்பைத் தங்கள் உலையிட் டுடல்வளர்ப்பார்,
பார்புகழ வேண்டிப் பகற்கொள்ளை செய்திடுவார்,
வற்புறுத்தி ஏழையரை வாட்டி வதைத்திடுவார்,
கற்பழிப்பார் யாரும் கழுவேற்றத் தக்கவர்கள்” 90

என்று பறைசாற்றி ஏற்றமிகு நல்லாட்சி
ஒன்றைச் சமைக்காரோ?
இந்நினைவால் உய்ந்திருப்போம்.
அந்தநாள் நோக்கி அருந்தமிழீர் நாம்நடப்போம்!
எந்த நிலைவரினும் ஏற்றம் தளரோம்யாம்!
சோர்வுற்ற போழ்தில் தமிழை நினைத்தெழுவோம்!

ஆர்வமுறப் பாடி அழிந்துவரும் நல்லுணர்வைத்
தூக்கி நிறுத்திடுவோம்! தோய்துயரைத் தாமறப்போம்!
ஊக்குகின்ற சொற்கள் உகுப்போம்;கண் ணீருகுக்கோம்!
என்ன துயர்வரினும் ஏற்ற பணிமுடிப்போம்!
அன்னைத் தமிழ்மேல் அருஞ்சூள் உரைத்தெழுந்தோம்! 100
இன்னல், வறுமை, இழப்பு, கொடு நோய்க்கஞ்சோம்!
மின்னல் இடிமழைக்கு மேனி நடுநடுங்கோம்! -
வல்சிறைக்கே அஞ்சோம்! பதவிக்கு வால்பிடியோம்!
புல்லியர்தம் பொய்யுரைக்கே
புண்பட்டு யாம்வருந்தோம்!
துன்பம் தொடர்க! துயர்வருக! அத்துயர்மேல்
இன்பம் மலர்க இனி!

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/89&oldid=1424746" இலிருந்து மீள்விக்கப்பட்டது