பக்கம்:கனிச்சாறு 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


36  தமிழனுக்கு ஒப்பாரி!

ஐயோ தமிழ்மகனே! ஆண்டிருந்த மன்னவனே;
பொய்யோ புதுக்கனவோ? போகா நெடுநினைவோ?
மெய்யாய் நடப்பதுவோ மேனிச் சிலிர்சிலிர்ப்போ?
உய்யாய் எனநினைந்த ஊரார் களிப்புறவே-
வாழாய்நீ என்ற வடவர் மகிழ்வுறவே-
வீழாயோ என்றிருந்த வேறார் உவப்புறவே,
சாய்ந்தாயே! ஆலஞ் சருகாய் விழுந்தாயே!
வாய்ந்த பெருமையெலாம் வாயெடுத்துப் பாடிடுவேன்;
வாய்ந்த பெருமையினை வாயெடுத்துப் பாடிடுங்கால்,
மாய்ந்த உயிரும் மறிக்கவந்து தங்கிடுமா? 10
மாய்ந்த உயிரும் மறிக்கவந்து தங்குமெனில்
தோய்ந்த நறுந்தமிழில் தோதாகப் பாடேனோ?
கன்னல் தமிழில் கனிவாகப் பாடேனோ?
என்னேர் தமிழில் இசையேறப் பாடேனோ?
சொல்லுக்குச் சொல்லும் சுவையேறப் பாடினமால்
கொல்லவரும் அம்பும் குறிதப்பிப் போகாதோ?
வெல்லவரும் மாற்றாரும் வில்லொடிந்து போகாரோ?
வல்லதடா நின் நினைவும் வாழ்க்கைக் கெருவாகும்!

பாண்டிமன்னன் பெற்ற பழமேனி நின்மேனி!
ஆண்டவனும் நீயே! அரசரெலாம் நின்குடியே! 20
சோழமன்னன் பெற்ற திருமேனி நின்மேனி,
வாழவந்தாய் நீயே, வடவர் குறிதொடுத்தார்.
சேரமன்னன் பெற்ற சிறப்பெல்லாம் நின்சிறப்பே!
சீரவிந்து போனாய்; சிறப்பிழந்து வீழ்ந்துவிட்டாய்!

தப்பாக் குறிவைத்தார்; தாழாமல் அம்பெடுத்தார்;
எப்பாலும் சூழ்ந்தவரை என்செய்வார் என்றிருந்தாய்.
மாறாக் கவணெடுத்தார்; மாய்க்காமல் மாய்த்துவிட்டார்;
வேறாய் நினைக்கவில்லை; வீணரவர் வீழ்த்திவிட்டார்!

வெல்வாரோ என்றிருந்தாய் வேலியிட நீமறந்தாய்!
கொல்வாரோ என்றே குறிவைக்க நீமறந்தாய்! 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/92&oldid=1424754" இலிருந்து மீள்விக்கப்பட்டது