பக்கம்:கனிச்சாறு 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


40  போலித் தமிழ்த் தொண்டர்!

அரும்பைத் தமிழ்க்கொரு தொண்டரென்
றார்ப்பார்; அழிபகைவர்
இரும்பைக் குழம்பெனக் காய்ச்சிமே
லூற்றினும் ஏற்பமென்பார்;
துரும்பைப் புரட்டினும் தொண்டெனப் பேசியே
தோள்கலிப்பார்;
குரும்பையர்; வெற்றுக் குடுக்கையர்; சொல்லால்
குழைபவரே! 1

முன்னிவை செய்தனம்; பின்னிவை செய்குவம்;
முத்தமிழ்த்தாய்
தன்னிறை வாகிட ஆவியு டல்பொருள்
தந்தமென்பார்;
சொன்னிறை வல்லால் வினைநிறை வல்லார்;
சோர்ந்தனரால்
எந்நிலை யார்வந் துரைக்கினும் ஏலார்;
எழுகிலரே! 2

மாற்றுவர் சொன்னசொல்; உண்மையின்
சான்றோர் மனங்கசியத்
தூற்றுவர் வேற்றுப் புலத்திடை! ஒன்றைத்
துணிந்து செயின்
எற்றுவர் வெற்றிப் புகழ்க்கொடி; ஏமாற்
றுறுந்தமிழர்
போற்றுவ ராயின் புதுநடை போடுவர்;
பொக்கவரே! 3

தாமுந் துணிகிலார்; தம்மின் துணிந்தவர்
தம்வினையை
ஆமென் றுடன்பட் டயலயல் போகி
அவை தமக்கே
ஏமம் புரிபவர் யாமென் றுரைத்தே
அகமகிழ்வார்;
வாமம் புரிதமிழ்த் தாயினுக் கன்னார்
வளர்களையே! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/98&oldid=1424756" இலிருந்து மீள்விக்கப்பட்டது