பக்கம்:கனிச்சாறு 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


தேயிலைத் தோட்டத் துள்ளே
தேட்டங்கள் செய்வ தெல்லாம்,
நோயினில், கொடுமை தன்னில்
நொந்துடல் மெலிவ தெல்லாம்,
நாயினும் இழிவாய் வாழும்
நந்தமிழ்க் கூட்ட மே, ஆம்!
வாயிலாப் புழுவாய் அங்கே
வதைப்பட்டுச் சாகின் றார்கள்!

கொய்வது குளம்பிக் கொட்டை[1]
குடிப்பது பச்சைத் தண்ணீர்!
நொய்வப்பால்[2] எடுப்ப தெல்லாம்
நொடிகின்ற தமிழர் கூட்டம்!
உய்வதும் நாட்டை யாளும்
உரிமையும் சிங்க ளர்க்கே!
செய்வதங் கின்ன தென்று
தெரியாமல் திகைக்கின் றார்கள்!

இமிழ்கடல் வரைப்பில் தோன்றி
இவ்வுல கெல்லாம் ஆண்ட
தமிழ்மொழி அடிமை மக்கள்
தாய்மொழி யாகும், அங்கே!
தமிழ்மொழிக் கல்விக் கங்குத்
தனியிடம் அளிப்ப தில்லை?
உமிழ்தரு சிங்க ளத்தில்
உரையாற்றல் சட்டம், அங்கே!

பாண்டியன் மரபில் தோன்றி
உலகெலாம் பரந்து வாழும்
மாண்டிறல் தமிழ ரைத்தாம்
மரமேறும் கூலி என்பார்!
வேண்டிய தெல்லாம் நன்கு
விளைவித்துக் கொடுத்த கூட்டம்
கூண்டில் அடைக்கப் பெற்ற
அரிமாப்போல் குறுகிற் றங்கே!

  1. 1
  2. 2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/103&oldid=1424594" இலிருந்து மீள்விக்கப்பட்டது