பக்கம்:கனிச்சாறு 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  77


தமிழர்க்கிங் குரிமைச் சாவே
விடுதலை வாழ்வாம் என்க!
கமழ்புகழ் பேரி னந்தன்
காலந்தேர் கால மெல்லாம்
அமிழ்கின்ற அடிமைச் சேற்றில்
அலைவுறல் வாழ்க்கை என்றால்,
உமிழ்கந்த வாழ்க்கை யின்மேல்;
ஒருகோடித் தீமை சாகும்! 17

என்னினம் உலகத் தின்மேல்
எந்நாட்டிற் போய்வாழ்ந் தாலும்
பொன்னினம் பொன்னி னந்தான்!
புகழ்பூத்த பேரி னந்தான்!
மின்னினம் கதிரி னம்போல்
மேலினம் பழமை என்பேன்!
முன்னினும் பெருமை யாக
முகிழ்ப்பதற் குரிமை வேண்டும்! 18

உரிமைநல், லுணர்வு பூத்த
ஓரினந் தன்மேல் வந்து
நரிமைகள் மொய்ப்ப தில்லை;
நாய்களும் மோப்ப தில்லை!
உரிமைநல் லுணர்வு செத்த
ஓரினந் தன்னைக் காத்தல்
அருமையின் அருமை யாகும்!
அவ்வினம் கிளைத்தும் சாகும்! 19

தாய்நாட்டில், தமிழர் நாட்டில்,
தமிழர்கள் சாகும் போது,
சேய்நாட்டில் அவரின் சேய்கள்
செழிப்புற வாழ்தல் எங்ஙன்?
பாய்கின்ற குருதி யாறு
பாய்ந்தன்றோ உரிமை என்னும்
காய்காய்க்கும்; கனிப ழுக்கும்!
கருத்தினில் வைத்துக் கொள்க! 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/106&oldid=1424597" இலிருந்து மீள்விக்கப்பட்டது