பக்கம்:கனிச்சாறு 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


73  நெஞ்சை உருக்கும் நிலை.

நெஞ்சை உருக்குதடா! - நம்
நினைவைக் கருக்குதடா! - ஒரு
பஞ்சைப் பழுதென, ஈழ நிலத்தினில்
பைந்தமிழ்த் தாயினம்
அஞ்சி வாழுநிலை (நெஞ்சை)

கெஞ்சி மறுகுகின்றார் - கொடுங்
கேட்டில் கருகுகின்றார்! - 'த்சொ'
கொஞ்சமோ துயர்! எஞ்சுமோ உயிர்!
குடிமைத் தமிழினம்
மிடிமைப் படும்நிலை (நெஞ்சை)

கூறுகூ றாய்ப்பிரிந்தார் - பல
குடும்பங்க ளாய்க் கரிந்தார் - அட,
ஆறுமோ துன்பம் தீருமோ என
ஆண்ட தமிழினம்
மாண்டு வரும்நிலை (நெஞ்சை)

குலைக்குள் வெயர்த்ததடா! - நம்
குடர்க்குள் சிலிர்த்ததடா - படு
கொலைக்கும் புலைக்குமாய் அலைக்கப் பட்டே, உயர்
கொற்றத் தமிழினம்
செற்றப் படும்நிலை (நெஞ்சை)

ஏழ்மைத் தொழிலாளர் - மலை
ஏறும் உழைப்பாளர் - இனி
வாழ்வா இலைஉயிர் வீழ்வா எனும்படி
வாய்மைத் தமிழினம்
நோய்மைப் படும்நிலை (நெஞ்சை)

அழிவுக்குள் ளாகினரே! - ஓ!
ஆதர வற்றனரே! - பல
இழிவும் இழப்புமாய் ஏதிலி யாய்விட்ட
ஈழத் தமிழினம்
வாழத் தகாநிலை (நெஞ்சை)

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/109&oldid=1424600" இலிருந்து மீள்விக்கப்பட்டது