பக்கம்:கனிச்சாறு 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  83


76  தென்னவர் இனமே! தென்னவர் இனமே!


தென்னவர் இனமே! தென்னவர் இனமே!
என்னதான் இயம்பினும் இம்மியும் நெகிழாத்
தன்னுணர் வழிந்த தென்னவர் இனமே!

முன்னவர் தாங்கிய மொய்ம்புகள் குறைந்து
சின்னவர் ஆகிச் சீரழிந் தனையே!

அறமுறை பிழையா அரசியல் திறம்பி
மறமுறை தழுவி மாண்பழிந் தனையே!

அருளியல் நெறியால் ஆக்கம் பகிர்ந்த
பொருளியல் தாழ்ந்து புன்மையுற் றனையே!

கலைமலி வாழ்க்கை கைநெகிழ்த் தின்று
புலைமலி காட்சிப் புரையோ டினையே!

பாலுறுந் தூய பசுந்தமிழ் மறந்து
மாலுறும் வேற்று மருள்மொழி பலவால்
கலப்பும் உலப்பும் கழிவறைக் கொச்சையும்
அலப்புரை வழங்கும் அரும்பொரு ளின்மையும்
மேலுற விழிந்து மெய்ப்பொருள் தாழ்ந்து
காலுறும் அடிமை கைப்பற் றினையே!

பழிமிகும் இந்நிலை படிப்படி வீழ்த்தி
இழிமிகும் உன்னிலை ஏற்றம் கொள்ள
விழித்தெழு வாயோ; வீறுகொள் வாயோ?
அழித்தெழு தாத,எம் ஆர்வ எழுத்தினால்
செழித்த பெரும்புகழ் சேரக்
கொழித்த நடையிடாய், குமரியர் இனமே!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/112&oldid=1424604" இலிருந்து மீள்விக்கப்பட்டது